முன்னாள் கல்வி அமைச்சர் பதியுதீன் மஹ்மூத், கம்பளை ஸாஹிரா தேசிய பாடசாலையில் விட்டுச் சென்ற அதே பணிகளை, அந்த இடத்திலிருந்து நான் தொடர்வேன். இப் பாடசாலையில் என்னென்ன குறைபாடுகள் உள்ளதோ, அக்குறைபாடுகளை அவரைத் தொடர்ந்து நிவர்த்தி செய்து தருவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். அவற்றை, ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வழிகாட்டலின் ஊடாக முன்னெடுப்பேன் என்று, கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ் தெரிவித்தார்.

உடுநுவர, எலமல்தெனிய, பேர்ல்வைட் வரவேற்பு மண்டபத்தில், கம்பளை ஸாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினர் மற்றும் வேட்பாளர் பாரிஸ் ஆகியோருக்கு இடையிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றபோதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

வேட்பாளர் பாரிஸ் இங்கு மேலும் குறிப்பிடும்போது, கம்பளை ஸாஹிரா தேசிய பாடசாலையின் கல்வி மேம்பாட்டுக்காக, அப்போதைய பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்து செயற்பட்ட பதியுதீன் மஹ்மூத் அயராது பாடுபட்டு உழைத்தார். இப்பாடசாலையில் நானும் எனது கல்வியைப் பெற்றுள்ளேன் என்பதையும் பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அந்த வகையில், இப்பாடசாலைக்குத் தேவையான உதவி ஒத்தாசைகளைப் புரியவேண்டியது, எனது தலையாயக் கடமையாகும். இப்பாடசாலையில் இன்னும் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக, பழைய மாணவர் சங்கத்தினர் என்னிடம் சுட்டிக்காட்டினர். இவற்றை அவசியமாகச் செய்வதற்கான ஒழுங்குகளை நிச்சயம் மேற்கொள்வேன்.

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் நான் வெற்றிபெற்றுத் தெரிவானால், நிச்சயம் கம்பளை ஸாஹிராவுக்குத் தேவையான அனைத்து வளங்களையும் பெற்றுத் தருவேன். இங்குள்ள தேசிய ரீதியிலான பிரச்சினைகளையும், அமையவிருக்கும் புதிய அரசாங்கத்தின் உதவியோடு பெற்றுக் கொடுப்பேன் என்றார்.

ஐ.ஏ. காதிர் கான்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.