ஐ.ஏ. காதிர் கான்

முஸ்லிம் தலைமைகள் சரியான அரசியல் பாதையிலிருந்து விலகிச் செல்வதால், எமது கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுடைய கல்வியின் துயர் நிலையைத் துடைப்பதற்கு யாருமற்ற வெற்றிடமொன்று காணப்படுகிறது.

இதன் மூலம், எங்கள் மீது கவனம் செலுத்தாத அரசியல்வாதிகள் எங்களை ஆள முற்படும் ஒரு இக்கட்டான சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்று, கண்டி மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ் தெரிவித்தார்.

தெவி நுவர கல்வி வலயத்திற்குட்பட்ட அதிபர், ஆசிரியர்களுக்கான விஷேட கலந்துரையாடல், கண்டி எலமல்தெனிய பேர்ல் வைட் வரவேற்பு மண்டப கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோது, இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கும்போது, எஸ்.டப்ளியூ.ஆர்.டீ. பண்டார நாயக்க முன்னெடுத்த கொள்கை சரியானது. நல்லதொரு எதிர்காலம் ஒன்று உருவாகும். நீங்கள் அனைவரும் அதனை ஏற்றுக் கௌ்ளுங்கள் என்று, 1956 ஆம் ஆண்டுகளில் கலாநிதி பதியுதீன் மஹ்மூத் தெரிவித்திருந்ததை நாம் யாரும் மறந்துவிட முடியாது. என்றாலும் கூட, அப்போதும் அவருக்கு எதிராகவும் செயற்பட்டவர்கள் பலர் உண்டு.

இந்நிலையில், அவர் எடுத்த சரியான முடிவினால் அவர் வகித்த கல்வி அமைச்சுப் பதவி, அதன் ஊடாக அவர் வழங்கிய ஆசிரியர் தொழில்கள், இன்று வரையிலும் மக்கள் மத்தியில் பேசப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. அதனை அவர் தனது வாக்குப் பலத்தினால் மாத்திரமே செய்தார்.
கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுடைய கல்வியின் துயர் துடைப்பதற்கு, ஆளும் கட்சியிலிருந்து முஸ்லிம் பிரதி நிதித்துவம் ஒன்றைப் பெற்றுக்கொள்வது, இன்றைய கால கட்டத்தின் கட்டாயத் தேவையாகும்.

அதற்குறிய சிறந்த நாளாக ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதியை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும். இச்சிறப்பு நாளில்தான், கண்டி மாவட்ட முஸ்லிம்களின் எதிர்காலம் தங்கியுள்ளது.

எனவே, இதனை வெறும் சூனியமாக, வெற்றிடமாக முஸ்லிம்கள் மாற்றிக் கொள்ளக் கூடாது. கண்டி மாவட்ட முஸ்லிம்களின் எதிர்காலக் கனவுகள் நனவாக வேண்டுமென்றால், எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சிக்கு ஆதரவளித்து, எனக்கும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்குமாறு இன்றைய சிறப்பு நாளில் கேட்டுக் கொள்கின்றேன்.

இந்நிகழ்வில், சட்டத்தரணி பஸ்லின் வாஹித், ஆஷிக் எம். நியாஸ் மற்றும் நுகர்வோர் அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.எம் பௌசர் ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.