அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்துடன் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது புதிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜார்ஜின் மரணத்திற்கு நேரடி காரணமாக குற்றம் சாட்டப்பட்டுள்ள காவல்துறை அதிகாரியான டெரெக் சாவின் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்போது இரண்டாம் நிலை கொலை (திட்டமிடப்படாத கொலை) குற்றச்சாட்டாக மாற்றிமைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமின்றி, இந்த சம்பவத்தின்போது நிகழ்விடத்தில் இருந்த மூன்று காவல்துறை அதிகாரிகள் மீது முதல் முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாண தலைநகர் மினியாபொலிஸில், மே 25ஆம் தேதி 46 வயதான ஜார்ஜ் ஃப்ளாய்ட் காவல்துறை அதிகாரி சாவின் பிடியில் இருந்தபோது கழுத்து நெறிபட்டு இறந்தார்.
இதன் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி அது நாடு தழுவிய போராட்டத்துக்கு வித்திட்டுள்ளது.

புதிய கொலை குற்றச்சாட்டுகளுக்கு என்ன பொருள்?

மின்னசோட்டா மாகாண சட்டப்படி, முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை கொலை குற்றஞ்சாட்டு சுமத்தப்பட்டவர், கொலை செய்யும் எண்ணத்துடன் இருந்ததற்கான ஆதாரத்தை சமர்ப்பிப்பது அவசியம்.

black American George Floyd deathபடத்தின் காப்புரிமை
Image captionஎட்டு நிமிடம் 46 நொடிகளுக்கு ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் கழுத்தில், காவலர் சாவின் காலை வைத்து அழுத்தியுள்ளார் என வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

மூன்றாம் நிலை கொலை குற்றச்சாட்டை பொறுத்தவரை, குற்றம் சுமத்தப்பட்டவர் கொலை செய்யும் எண்ணத்துடன் இருந்ததற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டியதில்லை.
அதாவது, குற்றஞ்சாட்டப்பட்டவரின் நடவடிக்கைகள் ஆபத்தானவை மற்றும் மனித வாழ்க்கையைப் பொருட்படுத்தாமல் மேற்கொள்ளப்பட்டதற்கான ஆதாரங்கள் இருந்தாலே போதுமானது.
இரண்டாம் நிலை கொலை குற்றம் உறுதிசெய்யப்பட்டால் குற்றவாளிக்கு அதிகபட்சம் 40 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும். இது மூன்றாம் நிலை குற்றச்சாட்டை விட 15 ஆண்டுகள் அதிகமாகும்.

அமெரிக்கா முழுவதும் தொடரும் போராட்டங்கள்

அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் மீது காவல்துறையால் தொடுக்கப்படும் இனவெறி தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டுமென்றும், ஜார்ஜ் மரணத்திற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி அந்த நாடு முழுவதும் கடந்த எட்டு நாட்களாக பெரும்பாலும் அமைதியான வழியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும், சில இடங்களில் காவல்துறையினரின் வாகனங்களை எரிப்பது, தாக்குவது போன்ற வன்முறை நிகழ்வுகளும் நடந்தேறின.

மின்னசோட்டா மாகாண அட்டர்னி ஜெனரல் எல்லிசன்படத்தின் காப்புரிமை
Image captionமின்னசோட்டா மாகாண அரசு வழக்கறிஞர் கீத் எல்லிசன்

இந்த புதிய வழக்குப்பதிவுகள் குறித்து அறிவித்த மின்னசோட்டா மாகாண அரசு வழக்கறிஞர் கீத் எல்லிசன், இது நீதியை நிலைநாட்டுவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றார்.
டெரெக் சயூவின் மீது ஆரம்பத்தில் சுமத்தப்பட்ட மூன்றாம் நிலை கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் தொடருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிநீக்கம் செய்யப்பட்ட மற்ற மூன்று காவல்துறை அதிகாரிகளான தாமஸ் லேன், ஜே அலெக்சாண்டர் குயெங் மற்றும் டூ தாவோ ஆகிய மூவர் மீதும் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக இருவேறு குற்றஞ்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஃப்ளாய்ட் குடும்பத்தின் வழக்கறிஞரான பெஞ்சமின் கிரும்ப், “இது நீதிக்கான பாதையில் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். ஜார்ஜ் ஃப்ளாய்டின் உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னர் இந்த முக்கியமான நடவடிக்கை எடுக்கப்பட்டதை எண்ணி நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், பின்னர் சி.என்.என். தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த வழக்கறிஞர் பெஞ்சமின், டெரெக் மீதான குற்றச்சாட்டு முதல் நிலை கொலை என்று குடும்பத்தினர் நம்புவதாகவும், விசாரணை நடந்து கொண்டிருப்பதால், குற்றச்சாட்டுகள் மேலும் மாறக்கூடும் என்று அவர்களிடம் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அமெரிக்கபோராட்டங்களின் நிலை என்ன?
அமெரிக்காவின் பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, அமைதிவழி போராட்டங்களில் சமூக விரோதிகள் நுழைந்து போராட்டத்தை திசைதிருப்ப கூடும் என்பதால் அங்குள்ள பெரும்பாலான நகரங்களில் இரவு நேரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் நேற்றிரவு பெரும்பாலும் குறைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மாகாணங்களுக்கும், நகரங்களுக்கும் ராணுவத்தை அனுப்ப வழிவகை செய்யும் 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஏற்படுத்தப்பட்ட சட்டத்தை பயன்படுத்தலாம் என்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் ஆலோசனையை தான் ஏற்கவில்லை என்று அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை செயலாளர் மார்க் எஸ்பெர் கூறுகிறார்.

TWITTER/RUTH RICHARDSONபடத்தின் காப்புரிமை
Image captionஜார்ஜ் ஃப்ளாய்ட்

எனினும், இதைத்தொடர்ந்து வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கூட்டத்திற்கு பின்னர், வாஷிங்டன் நகரில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ராணுவத்தினரை திரும்ப பெறும் முடிவிலிருந்து மார்க் பின்வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசு வழக்கறிஞர் என்ன கூறினார்?

ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்திற்கு காரணமான காவல்துறை அதிகாரிகளுக்கு தக்க தண்டனை வழங்கப்படும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் மின்னசோட்டா மாகாண அரசு வழக்கறிஞர் எல்லிசன், அதில் தெளிவான சவால்கள் இருப்பதை வரலாறு காட்டுவதாக கூறுகிறார்.
ஜார்ஜ் ஃப்ளாய்ட் "அவரது குடும்பத்தினரால் நேசிக்கப்பட்டார், அவரது வாழ்க்கைக்கு மதிப்பு இருந்தது" என்றும் "நாங்கள் உங்களுக்காக நீதியைத் தேடுவோம், அதைக் கண்டுபிடிப்போம்" என்றும் எல்லிசன் கூறினார்.
சமுதாயத்திற்கு நீதியைக் கொண்டுவருவது அடிப்படையில் மெதுவான மற்றும் கடினமான வேலையாக இருக்கும் என்றும், அந்த வேலையைத் தொடங்க அமெரிக்கர்கள் ஃப்ளாய்ட் வழக்கின் முடிவுவரை காத்திருக்க வேண்டியதில்லை என்றும் அவர் கூறினார்.
"ஒரு நியாயமான சமுதாயத்திற்கான விதிகளை நாம் இப்போது மீண்டும் எழுத வேண்டும்" என்று மேலும் அவர் கூறினார்.
மின்னசோடாவை பொறுத்தவரை, இதுவரை ஒரேயொரு காவல்துறை அதிகாரி மீது மட்டுமே பணியில் இருக்கும்போது குடிமகன் ஒருவரை கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

(பிபிசி)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.