கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பாதுகாப்புப் படையினர், பொலிஸ் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, நாட்டில் வைரஸ் தொற்றுக்கான இரண்டாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

"எமது பாதுகாப்பு படைகள், பொலிஸ் மற்றும் சுகாதார அதிகாரிகளின் அயராத அர்ப்பணிப்புக்கு நன்றி தான் தெரிவிப்பதாகவும் கடந்த 40 நாட்களில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட ஒருவர் கூட சமூகத்திலிருந்து பதிவாகவில்லை எனவும் குறிப்பிட்டார்.
இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் தலைமையில் நாம் வைரஸைக் கட்டுப்படுத்த ஒரு பயனுள்ள பொறிமுறையைப் பயன்படுத்தியுள்ளோம், மேலும் எமது படை வீரர்கள், பொலிஸ் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் சேர்ந்து எதிர்காலத்திலும் தொடர்ந்து அதே வழிமுறையைப் முன்னெடுக்கவுள்ளனர். எனவே, நாட்டில் வைரஸ் தொற்றுக்கான இரண்டாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என நான் நம்புகிறேன், ”என மேஜர் ஜெனரல் குணரத்ன புதன்கிழமையன்று பத்தரமுல்ல பாதுகாப்பு தலைமையகத்திற்கு விஜயம் செய்தபோது ஊடகங்களிடம் தெரிவித்தார்.

ஒருவேளை இரண்டாவது அலை அச்சுறுத்தல் ஏற்பட்டாலும், இராணுவம், பொலிஸ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நிலைமையை திறம்பட எதிர்கொள்வார்கள் என அவர் தெரிவித்தார்.

இலங்கை இராணுவத்தால் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ தயாரிப்புக்களை பார்வையிடுவதற்காக பத்தரமுல்ல பாதுகாப்பு தலைமையகத்திற்கு பாதுகாப்புச் செயலாளர் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் பணிப்புரைக்கமைய கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கிளை மற்றும் மின் மற்றும் இயந்திர பொறியாளர்கள் பணியகம் ஆகியவற்றின் புதிய கண்டுபிடிப்புக்கள் பல உருவாக்கப்பட்டன.

மருத்துவ ரீதியாக புதுமையாக கண்டுபிடிக்கப்பட்ட 29 உபகரணங்கள், புற ஊதா சி (திட்டம்), மருத்துவ திட்டம் (வென்டிலேட்டர்கள்) மற்றும் கிருமி நீக்கம் செய்யும் கருவி (திட்டம்) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டன. இவைகள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு முன்பாக எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் சேவைச் சான்றிதழ், தேசிய அடிப்படை ஆய்வுகள் நிறுவனம், மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், சுகாதார அமைச்சின் நுண்ணுயிர் திணைக்களம், இங்கிலாந்தின் மருந்துகள் மற்றும் சுகாதார தயாரிப்புகள் ஒழுங்குமுறை நிறுவனம், இலங்கையின் சுகாதார ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு சங்கம் ஆகியவற்றின் பரிந்துரைகளுக்காக முன்வைக்கப்பட்டன.

இராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கிளை பிரிகேட்டின் பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் பிரசாத் அகுரந்திலகே, மின் மற்றும் இயந்திர பொறியாளர்கள் பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர். இந்து சமரகோன் ஆகியோரின் மேற்பார்வையில் கீழ் உருவாக்கப்பட்ட இந்த கண்டுபிடிப்புக்களை பார்வையிட்ட பாதுகாப்பு செயலாளர், தலைமை சிக்னல் அதிகாரி மேஜர் ஜெனரல் அடீப திலகரத்ன, வழங்கல் மற்றும் போக்குவரத்து பணிப்பாளர் பிரிகேடியர். ஹிரோஷ வனிகசேகர மற்றும் இராணுவ மருத்துவ சேவைகள் பணிப்பாளர் பிரிகேடியர். கே.பி.என். பதிரன ஆகியோரிடம் வைபவ ரீதியாக கையளித்தார்.

கண்டுபிடிப்பாளர்களுடன் உரையாடிய மேஜர் ஜெனரல் குணரத்ன, தக்க தருணத்தில் தேவையான கண்டுபிடிப்புக்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டிய அவர்களின் முயற்சியைப் பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.

அததெரண 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.