2016 முதல் 2019 க்கு இடையில் மத்திய கலாசார நிதி செயற்பாடு குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் மத்திய கலாசார நிதியத்தில் 11 பில்லியன் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக குறித்த குழுவின் அறிக்கையின் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி காமினி சரத் எதிரிசிங்க, முன்னாள் அமைச்சரவை செயலாளர் கோட்டாபய ஜயரத்ன மற்றும் மூத்த சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹனதீர ஆகியோர் அடங்கிய குழுவை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நியமித்திருந்தார்.

இந்நிலையில் 2016 முதல் 2019 ஆம் ஆண்டுக்கு இடையில் மத்திய கலாசார நிதியத்தின் நிர்வாகத்தில் இருந்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு குறித்த குழு அரசாங்கத்தை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் மத்திய கலாச்சார நிதியத்தின் டொலர் கணக்கு வழியாக நிதி சட்டவிரோதமாக வெளியிடப்பட்டதாகவும், 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது 400 மில்லியன் நிதியின் நிலையான வைப்புத்தொகையில் இருந்து ஒப்புதல் இல்லாமல் விடுவிக்கப்பட்டதாகவும் குழு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் 25 நடப்புக் கணக்குகளும் கருவூலத்தின் ஒப்புதல் இல்லாமல் மத்திய கலாச்சார நிதியத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் குறித்த குழு சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.