(கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம்)

"கஹட்டோவிட்ட என்பது நூறு வீதம் முஸ்லிம் மக்கள் வாழும் கிராமம் ஆகும். இங்கு மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினர் வந்து வாக்கு கேட்பதற்கு என்ன உரிமை இருக்கிறது? அதற்காக அவர்கள் கூறும் காரணம் என்ன? அவர்கள் ஆட்சி செய்த இதுவரையான சில மாதங்கள் அல்லது இதற்கு முன்னர் அவர்களது ஆட்சிக்காலத்தில் என்ன செய்தார்கள் என்பதனை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்" என்று முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் வேட்பாளருமான இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்தார்.

கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களான ஷிராஸ் மொஹமட், சந்திரசோம சரணலால், ஹர்சண ராஜகருணா ஆகியோரை ஆதரித்து கஹட்டோவிட்ட கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இலங்கை வரலாற்றில் முஸ்லிம்களே இல்லாத அமைச்சரவை ஒன்றை உருவாக்கியது கோத்தாபய ராஜக்ச. அதனாலா அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்? இந்த தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்கள் ஆளுந்தரப்பில் இல்லை. குறிப்பிடத்தக்க இருவரை மாத்திரம் போட்டிருக்கிறார்கள். ஒருவர் காதர் மஸ்தான், அவர் முன்னாள் உறுப்பினர் என்பதனால் போட்டிருக்கிறார்கள். மற்றவர் வர்த்தகர் பாரிஸ், அவருக்கு கோத்தாபயவுடன் இருக்கும் தனிப்பட்ட உறவு காரணமாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று எனக்கு புரிவது என்னவென்றால் அரசியல், பொருளாதாரம், கல்வி போன்றவற்றில் முஸ்லிம்களை பின்னடையச் செய்ய வேண்டும் என்ற வேலைத்திட்டத்தில் ஈடுபட்டடுள்ளார்கள். முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காக சில இடங்களில் சுயேட்சைக் குழுக்களை களமிறக்கியுள்ளார்கள். 

முஸ்லிம்களின் கல்வியை வீழ்ச்சியடையச் செய்வதற்காக ஜாமிஆ நளீமியாவிற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மத்ரஸா கல்விக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிற்கு தலையை நேராக வைத்து பேச முடியாத நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. வர்த்தக நிலையங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. காதி நீதிமன்றம் மற்றும் முஸ்லிம் தனியார் சட்டத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

தற்போது நாம் எதிர்நோக்கியிருக்கும் பாராளுமன்றத் தேர்தல் இதுவரை நடைபெற்ற தேர்தல்கள் போன்று சாதாரணமானதல்ல. எதிர்வரும் 04 வருடங்களுக்கான நாட்டின் வரலாற்றை தீர்மானிக்கும் தேர்தலே இது. நாம் என்ன தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்று நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்று இல்லை.

சுதந்திரம் கிடைக்கும் வரை எமக்கு இருந்த ஒரே எதிரி நாட்டை ஆட்சி செய்த வெளிநாட்டவர்கள். நமக்குள் பிரிவினைவாதம் ஏற்பட்டது 1956 இன் பிறகாகும். அதன் பிறகு சிங்கள - தமிழ் பிரச்சினை ஏற்பட்டது. கத்தோலிக்க ஆக்கிரமிப்பு என்ற பெயரில் பிரச்சினை ஏற்படுத்தப்பட்டது.  இந்த அத்தனகல்ல தேர்தல் தொகுதியில், பண்டாரநாயக்க, சந்திரிக்கா போன்ற தலைவர்கள் முஸ்லிம் மக்களுடன் நல்லுறவையே பேணினார்கள். 

1956 இற்கு முன்னர் Lee Kuan Yew சிங்கப்பூரை தலைமையேற்கும் போது கூறினார், "நாம் என்றாவது ஒருநாள் சிங்கப்பூரை  இலங்கையாக மாற்றுவோம்" என்று. எமது மூதாதையர்கள் அன்று கூறினார்கள், சிங்கப்பூர் கூலிக்காரர்களின் தேசம் என்று. மேலும் சேரிப்புறங்களில் வீடுகள் இருந்தால் அவை "கொரியா" என்று அழைத்தார்கள். 

ஆனால் இன்று எமது பிள்ளைகள் தொழில் தேடி கொரியாவுக்கு செல்கிறார்கள். இவற்றுக்கான காரணம் 1950 இற்குப் பிறகு இந்த நாட்டில் சமூகங்களுக்கிடையில் ஏற்பட்ட பிரச்சினைகளாகும். தமிழர்களுடன் பிரச்சினை, கத்தோலிக்கர்களுடன் பிரச்சினை. முஸ்லிம் பிரச்சினை அல்லது சாதிப்பிரச்சினை. 

நாம் பிரித்தாளும் சூழ்ச்சிகளால் பின்தள்ளப்பட்டுள்ளோம். இன்று சஜித் பிரேமதாச ஏழைகளின் குரல் என்று அழைக்கப்படுகிறார். நான் கூறுகிறேன், அது ஒற்றுமையின் குரல். சஜித் Positive Nationalism குறித்து பேசுகிறார். எந்த சமூகத்தையும் புறக்கணிக்காமல் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவோம் என்று சஜித் கூறிவருகிறார். 

பெளத்தவாதம் வாக்குகளை பெறுவதற்காகவல்ல பாவிக்கப்படவேண்டும். இன்று கருணா தமிழ் மக்களிடம் சென்று "நான் ஒரே இரவில் 3000 சிங்கள இராணுவத்தினரை கொன்றேன்" என்று கூறுகிறார். கருணா மஹிந்த அரசில் அமைச்சராக இருந்தார். அவரது கட்சியின் உபதலைவராக இருந்தார். பிள்ளையானும் அவர்களுடனே இருக்கிறார். தமிழர்களிடம் இனவாதத்தைத் தூண்டி கருணா பாராளுமன்றம் செல்ல முயற்சிப்பது சஜித்தை அல்ல, மஹிந்தவை பலப்படுத்தவே ஆகும். 

வடக்கில் தமிழர்களிடம் இனவாதத்தை தூண்ட ஒரு அணியையும் தெற்கில் சிங்களவர்களிடம் இனவாததத்தை தூண்டுவதற்கு இன்னொரு அணியையும் அவர்கள் நியமித்திருக்கிறார்கள். அவர்கள் எமது பிள்ளைகளின் எதிர்காலத்துடன் விளையாடுகிறார்கள். இவர்களே பிரிவினைவாதத்தினை தூண்டுகிறார்கள். வடக்கு, கிழக்கு, தெற்கு எங்கு சென்றாலும் ஒரே குரலில் கதைக்கும் தலைவர்களே எமக்கு தேவை. 

சஜித்தின் தந்தை 1989 இல் ஜனாதிபதியாகும் போது இஸ்ரேலுடனான உறவை முறித்துக்கொள்வதாக தெரிவித்தார். அவருடைய புதல்வர் சஜித் மீது நம்பிக்கை வையுங்கள். ஆதரவை அதிகரியுங்கள். எமக்கு ஊடகம் இல்லை. அரச ஊடகங்கள் அனைத்தும் அரசாங்கத்திற்காக களவு செய்கின்றன. சுதந்திர ஊடகங்கள் அனைத்தும் அரசின் இலாபத்திற்காக இயங்குகின்றன. இன்னும் ஓரிரு வாரங்களே எமக்கு உள்ளன. அதனால் எமது பிள்ளகைளின் எதிர்காலத்திற்காக, அனைவருக்கும் சமமான உரிமைகளுடன் வாழக்கிடைப்பதற்கு உங்களுடைய வாக்குரிமையினை பயன்படுத்துங்கள் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சமகி ஜன பலவேகய சார்பாக கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடும் ஷிராஸ் மொஹமட், ஹர்சண ராஜகருணா, சந்திரசோம சரணலால் ஆகியோரும் உரை நிகழ்த்தியதுடன், ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி முக்கியஸ்தர் அல்ஹாஜ் ருஸ்தி, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு தலைவர் அல்ஹாஜ் முஸ்தாக் உட்பட சம ஜன பலவேகய முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பெருந்திரளான ஊர் மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.








கருத்துரையிடுக

Blogger இயக்குவது.