சிறுபான்மை இனத்தவர்கள் நாடாளுமன்றத்தில் இருப்பது அரசாங்கத்திற்கு தலைவலியாக மாறியுள்ளதாகவும்
சிறுபான்மை பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் அதிக அழுத்தங்களை கொடுப்பதால், அந்த பலத்தை வீழ்த்தி சிதறடிப்பதற்காக பொதுஜன பெரமுன அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறது எனவும் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கண்டி மாவில்மடையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே இதனை கூறியுள்ளார்.

கண்டி மாவட்டத்தில் ஒரு முஸ்லிம் வேட்பாளரும் வெற்றி பெற முடியாதளவுக்கு வாக்குகளை சிதறடிப்பதற்காக 22 முஸ்லிம் வேட்பாளர்களை ஊக்கப்படுத்தி சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளனர். வாக்குகள் சிதறடிக்கப்பட்டு, இறுதியில் ஒரு முஸ்லிம் வேட்பாளரும் வெற்றி பெற மாட்டார்.

பொதுஜன பெரமுன அரசாங்கம் இவ்வாறான குறுகிய நோக்கம் கொண்ட வேலைத்திட்டங்களில் ஈடுபட்டு, தமக்கு தேவையான அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. 19ஆவது அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்கு நாட்டின் சிறுபான்மை நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் அரசாங்கத்திற்கு பெரும் தடையாக இருந்து வருகிறது.

இம்முறை பொதுத் தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்குகளை வழங்கி, முஸ்லிம் வாக்குகளை சிதறடிப்பதன் மூலம் அனைத்து முஸ்லிம் வேட்பாளர்களும் தோல்வியடைவார்கள். இதனால், முஸ்லிம் மக்களுக்கு இடையிலான ஒற்றுமை அழிந்து போகும்.

இதனால், மிகவும் பொருத்தமான வேட்பாளரை தெரிவு செய்து, வெற்றி பெற செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஜனாதிபதித் தேர்தலில் இனவாதத்தை பரப்பி, வாக்காளர்களை ஏமாற்றி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவானார்.

பொதுத் தேர்தலில் பயங்கரவாத செயல்களை கூறி, முஸ்லிம் பிரதிநிதிகளை நாடாளுமன்ற முறையில் இருந்து நீக்கும் இரகசிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளனர் எனவும் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.