இலங்கையில் இரண்டாவது நீருக்கடியிலான அருங்காட்சியகம் திருகோணமலையில் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த அருங்காட்சியகத்தை கடற்படைத் தளபதி பியல் டி சில்வா நேற்று (10)  உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளார்.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை  சென்டி பே கடற்கரை கவருவதால், அக்கடற்கரையை அண்டியதாக இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சுமார் 60 அடி ஆழத்தில் 150 அடி நீளத்தில் 85 அடி அகலத்தில் குறித்த அருங்காட்சியகம்  அமைக்கப்பட்டுள்ளது.

கடற்படை தளபதியின் முழுமையான  மேற்பார்வையின் கீழ், கடற்படையினரின் பூரண ஒத்துழைப்புடன் குறித்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளதாக,  கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த பகுதி பவளப்பாறைகள் உருவாகுவதை ஊக்குவிக்கும் என்பதோடு,  மீன் வளத்தை அதிகரிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் தற்போது இப்பிரதேசத்தை அண்டிய பகுதியில் மீன் இனப்பெருக்கம் ஆரம்பமாகியுள்ள நிலையில், மிக விரைவில் சுற்றுலா பயணிகளுக்கு இப்பிரதேசத்தில் சுழியோடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

ஆயினும், இப்பகுதியில் தற்போது மீன்பிடியில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், மீன் இனப்பெருக்கப் பகுதி அபிவிருத்தி செய்யப்பட்டவுடன், மீனவர்களுக்கு உச்சபட்ச நன்மைகள் கிடைப்பதற்கான வாய்ப்புக் கிடைக்கும் எனவும், கடற்படை ஊடகப் பிரிவுதெரிவித்துள்ளது. 

இப்பகுதியில் நீந்துபவர்களுக்கும் நீராடுபவர்களுக்கும் தனித்துவமானதொரு  பார்வையிடும் அனுபவத்தை குறித்த அருங்காட்சியகம் வழங்கும் எனவும், கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  

இதேவேளை, எதிர்காலத்தில் இதுபோன்ற மற்றுமொரு நீருக்கடியிலான அருங்காட்சியகத்தை, தங்காலை பிரதேசத்தில் நிர்மாணிக்க கடற்படை திட்டமிட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே காலி பகுதியில் இலங்கையின் முதலாவது அருங்காட்சியகத்தை கடற்படையினர் நிர்மாணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.