கலீல் எஸ்.முஹம்மத்

மாளிகைக்காடு தொடக்கம் கல்முனை நகரம் வரையான குளக்கரையை பாதையமைக்கும் எனது தூரநோக்கு சிந்தனையின் முதற்கட்ட செயற்பாடே சாய்ந்தமருது- கல்முனைக்குடி குளக்கரை வீதியாகும் என்று முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சரும் பொதுஜன பெரமுன முக்கியஸ்தருமான மயோன் முஸ்தபா தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் றிஸ்லி மயோன் முஸ்தபாவை ஆதரித்து சாய்ந்தமருதில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில்  கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு மயோன் முஸ்தபா மேலும் தெரிவிக்கையில்;

இதற்கு முன்னர் பிரதான வீதியின் மேற்கு பக்கம் அமைந்துள்ள கடைத் தொகுதிகளுக்குப் பின்னால் அமைந்துள்ள குடியிருப்புகளுக்கான வீதியென்பது ஒரு குறுக்கு வழி பாதையாகவே இருந்தது. இக்குடியிருப்பு வீடுகள் மற்றும் வளவுகள் அனைத்தும் கரைவாகு குளக்கரையை தொட்டதாக காணப்பட்டன. ஆகையினால் இவ்வீடு, வளவுகளுக்கும் குளக்கரைக்கும் இடையில் சுமார் 20 அடி அகலம் கொண்ட வீதியை உருவாக்கினேன்.

தோணாவின் இரு மருங்கிலும் வீதிகள் அமைக்கும்போது ஏற்பட்ட எதிர்ப்புகள் குளக்கரை வீதியை அமைக்கும்போதும் ஏற்பட்டது. ஆனால் இறைவன் உதவியால் சாய்ந்தமருது பொலிவேரியன் தெற்குப் பாலம் தொடக்கம் கல்முனைக்குடியின் அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலையை அண்மித்த பகுதி வரையான நெடுந்தூரத்திற்கு பாதையை ஒரே நாளில் அமைக்க முடிந்தது.

இதனை கல்முனை நகரம் வரை கொண்டு செல்லும் எனது திட்டம், அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலையை அண்மித்த குளக்கரைப் பிரதேசத்தில் பாரிய எதிர்ப்புக் காட்டப்பட்டு, தடுக்கப்பட்டது. குறித்த சிலர் விளங்கியோ, விளங்காமலோ சமூக நோக்கம் கருதாமல் மூர்க்கமாக எதிர்த்தமையால் அது தடைப்பட்டது.

உண்மையில் எனது திட்டமோ கல்முனை நகரம் வரை இப்பாதையை கொண்டு செல்வது மட்டுமல்லாமல் கல்முனை அஷ்ரப் வைத்தியசாலைக்குப் பின்னால் உத்தேச வீதியில் இருந்து பாலம் ஒன்றினை அமைத்து மேற்குப் புறத்தில் உள்ள வயல் பிரதேசத்தில் 25 ஏக்கர் நிலப்பரப்பை எமது அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு ஒதுக்கீடு செய்து வைப்பதற்கு திட்டமிட்டிருந்தேன். இதன் மூலம் இவ்வைத்தியசாலைக்கு எதிர்காலத்தில் ஏற்படப்போகும் நிலத்தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் நோக்கம் இருந்தது. அதனை அன்றைய வைத்தியசாலை நிர்வாகத்தினருக்கு எவ்வளவு தெளிவுபடுத்தியும் யதார்த்தமாக உணர அவர்கள் முன்வரவில்லை என்பது துரதிஷ்டமாகும். ஆனால் வைத்தியசாலைக்கு நிலத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள இன்றைய சூழ்நிலையில் அன்று நான் முன்வைத்த தூரநோக்கு தீர்வினை உதாசீனம் செய்தமையால் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து அனுபவ ரீதியாக உணர்ந்துள்ளனர்.

எவ்வாறாயினும் சாய்ந்தமருது- கல்முனைக்குடி குளக்கரை வீதி உருவாக்கத்தின் மூலம் ஒருவழிப்பாதையாக இருந்த சிறிய சிறிய ஒழுங்கைகள் இன்று பாரிய அபிவிருத்தி கண்டுள்ளது. குளக்கரையில் பின்னோக்கி இருந்த வீடுகள் இன்று குளக்கரையை முன்னோக்கி அமைக்கப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் கடைத் தொகுதிகள் உருவாகியுள்ளன. நிலத்தின் பெறுமதி வெகுவாக அதிகரித்துள்ளது.

இவை அனைத்தும் எனது நீண்டகால இலக்கில் பாரிய திட்டமிடல்களை அடிப்படையாகக் கொண்டு உருவானவையாகும். இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் அவ்வீதியானது கல்முனை நகர் வரை விஸ்தரிப்பு செய்யப்பட்டு, சாய்ந்தமருது- கல்முனை நெடுஞ்சாலைக்கு சமாந்தரமான பாதையாக அபிவிருத்தி செய்யப்படும். இதன் மூலம் பிரதான பாதை ஊடான போக்குவரத்து நெரிசல் குறைவடைவதற்கும் வாய்ப்பேற்படும்.

அதேவேளை எனது நீண்ட கால தூர நோக்கு சிந்தனையில் வரையப்பட்டுள்ள கல்முனை புதிய நகர அபிவிருத்தி திட்டத்தில் சம்மாந்துறை/ மாவடிப்பள்ளியில் இருந்து கரைவாகு வயல் வெளி ஊடாக கல்முனை நகர் வரை ஒரு நெடுஞ்சாலை அமைப்பதற்கான ஏற்பாடும் உள்ளதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கின்றேன். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.