(எம்.மனோசித்ரா)

கொழும்பு - ஜிந்துபிட்டி பகுதியில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு குறித்த நபர் வசித்த பகுதியை அண்மித்து வசித்து வந்த 28 குடும்பங்களைச் சேர்ந்த 154 பேர் அங்கிருந்து நீக்கப்பட்டு கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் ஜிந்துப்பிட்டி பிரதேசம் முழுமையாக மூடப்பட்டுள்ளதோடு குறித்த பிரதேசத்திற்கூடான போக்குவரத்துக்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. எனினும் இதனை சமூகப் பரவல் என்று கருதி பொது மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை இரவு இனங்காணப்பட்ட குறித்த நபர் இந்தியாவிலிருந்து வருகை தந்த இலங்கையின் கடற்பாதுகாப்பு அதிகாரியாவார். அவர் இந்தியாவிலிருந்து வருகை தந்ததன் பின்னர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த போது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் போது அவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கவில்லை.

அதன் பின்னர் கொழும்பு - 13 ஜிந்துபிட்டி பிரதேசத்தில் அவரது வீட்டில் மேலும் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இதன் போது அவரிடம் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 இவர் சமூகத்திலிருந்து ஒரு தொற்றாளராக இனங்காணப்படாமையின் காரணமாக இதனை சமூகப் பரவலாகக் கருத முடியாது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெளிவுபடுத்தியுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.