தமது சுயநலத்திற்காக இனவாத அரசியல் செய்து கொண்டு மக்களை தவறான திசைக்கு இட்டுச் செல்லும் செயற்பாட்டினை முஸ்லிம் சமூக அரசியல் தலைமைகள் கைவிட வேண்டும். இவ்வாறான தலைமைகள் காட்டும் தவறான வழிகளில் பயணிப்பதை மக்கள் கைவிட்டு விட்டு அனைத்து இனத்தவர்களும் ஒற்றுமைப்பட்டு சுதந்திரமாக வாழக்கூடிய நிலைமைக்கு வர வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றி தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினை ஆதரித்து நேற்று முன்தினம் (10) மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.ஜெஸீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில், இந்நாட்டில் சிறுபான்மைச் சமூகமாக இருக்கும் நமது முஸ்லிம் சமூகம் அனைத்து இனத்தவர்களுடனும் ஒற்றுமையாக வாழ வேண்டும். அப்போதுதான் நாம் நிம்மதியாக இந்நாட்டில் வாழ முடியும்.

காலத்திற்குக் காலம் சுய நலத் தேவைகளுக்காக நமது முஸ்லிம் தலைமைகள் நமது சமூகத்தினை தவறான வழிக்கு இட்டுச் சென்று வீணான பிரச்சினைகளையும் வீணான முரண்பாடுகளையும் தோற்றுவிப்பதற்கான வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றனர். இதனால் சிறுபான்மைச் சமூகத்தினருக்கே பாரிய பாதிப்புக்கள் ஏற்படுகின்றது.

சிறுபான்மைச் சமூகத்தினர் துவேசமான கருத்துக்களை மக்கள் மத்தியில் விதைப்பதனால் பேரின சமூகத்தினரும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட தொடங்குகின்றனர். எந்தவொரு நாட்டின் வரலாற்றினைப் புரட்டிப் பார்க்கின்றபோதிலும் அந்த நாட்டில் வாழும் பெரும்பான்மை சமூகத்தினை எதிர்த்து வெற்றி பெற்ற வரலாறு இல்லை.

ஏனெனில் பெரும்பான்மை சமூகத்தினை கொண்டுள்ள நாட்டில் அனைத்து விடயங்களும் அவர்களுக்கே சாதகமாக இருக்கும். இந்நிலைமையினைப் புரிந்து கொண்டு சிறுபான்மைச் சமூகத்தினர் பெரும்பான்மை சமூகத்தோடு ஒற்றுமைப்பட்டு செயற்பட முற்படுகின்றபோது நாட்டில் சமாதானமும் ஒற்றுமையும் எற்படும்.

மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அப்போது சில தேவைகள் ஏற்பட்டதன் காரணமாகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினை தோற்றுவித்தார். ஆதன் பின்னர் இந்நாட்டில் அனைத்து இனத்தவர்களையும் ஒன்றிணைத்து சிறுபான்மைச் சமூகம் முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதற்காக தேசிய ஐக்கிய முன்னணி எனும் கட்சியினை தோற்றுவித்து இக்கட்சியில் அனைத்து இனத்தவர்களையும் ஒன்றிணைத்து செயற்பட முற்பட்டார்.

இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலின்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சுமார் 137 ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றியினை ஈட்டவுள்ளது. இந்நிலையினை நாம் மேலும் விருத்தி செய்து நாடளாவிய ரீதியில் 150 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

இத்தேர்தலின்போது இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமைப்பட்டு பொதுஜன பெரமுன கட்சிக்கு வாக்களித்து வெற்றியின் பங்காளிகளாக மாறி தமது சமூகத்திற்கும் தமது பிராந்தியத்திற்கும் நன்மைகள் பலவற்றை பெறக்கூடிய வகையில் செயற்பட வேண்டும்.

கொடிய பயங்கரவாதம் இந்நாட்டில் இருந்து எவ்வாறு அழிக்கப்பட்டதோ, அதேபோல் இலங்கையில் தற்போது காணப்படும் போதைப் பொருள் பயங்கரவாதத்தினையும் இல்லாமல் செய்வதற்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றார். அதுமாத்திரமல்லாமல் எமது நாட்டின் சிறந்த தலைவராக இருப்பதனால்தான் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் அவரால் பாகுபாடற்ற உதவிகளை செய்து கொடுக்க முடிந்து என்றார்.

இதன்போது பெருந்தொகையான மாற்றுக் கட்சியினைச் சேர்ந்த இளைறுர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து கொண்டனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.ஹம்சா இதன்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து கொண்டதுடன், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றி முன்னிலையில் இக்கட்சியின் அங்கத்துவத்தினையும் பெற்றுக் கொண்டார்.

இதன்போது அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர்களால் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர்.




கருத்துரையிடுக

Blogger இயக்குவது.