கொரோனா தடுப்பு செயற்பாடுகளுக்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழு ஒரு மாதத்திற்கு மேல் கூடவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று உறுதிப்படுத்தியது.

புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் சேவையாற்றிய ஒருவர் மூலம் தற்போது சமூகத்தொற்று மாரவில பகுதிக்கு வந்துள்ளது. நாட்டிற்குள் நடமாடுவதை வரையறுக்கும் சட்டம் இல்லாத நிலையிலேயே இன்று பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. பாடசாலை மாணவர்கள் அந்தந்த பாடசாலைகளின் உள்ளே வைத்திய ஆலோசனைகளை உரிய முறையில் பின்பற்றாவிட்டால், இது சமூகத்தில் பரவும். இரண்டாம் அலை எனும் நிலையை அண்மித்த கட்டத்திலேயே தற்போது நாம் இருக்கிறோம்

என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஷெனால் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கடந்த இரண்டு வார காலத்தில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 1,600 PCR பரிசாதனைகளே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஷெனால் பெர்னாண்டோ, 68,000 பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டுமானால் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 2500 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான நிலையில், 1,600 PCR பரிசோதனைகள் மாத்திரம் மேற்கொள்ளப்பட்டதற்கான காரணம் என்னவென அவர் வினவினார்.

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கு அனுப்பப்பட்ட கைதிகளிடம் அவர்கள் அங்கு செல்வதற்கு முன்னர் PCR பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அந்த முகாமிற்கு அனுப்பப்பட்ட எவருக்கும் தொற்றில்லை. ஆனால், தற்போது அங்கிருந்து ஒரு நோயாளி பதிவாகியுள்ளார். மீண்டும் மீணடும் பரிசோதனைகளை நடத்தாத சிக்கலையே இது எடுத்துக்காட்டுகின்றது. அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் தீர்மானத்தின் பிரகாரம் எதிர்காலம் தீர்மானிக்கப்படும். அதற்காக தீர்மானங்களை எடுப்பதற்காக சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையிலான தொழில்நுட்பக் குழு ஒரு மாதமாகியும் இன்னும் கூடவில்லை. இது மிகவும் பாரதூரமான விடயம் என நாம் எச்சரிக்கை விடுக்கிறோம். இரண்டாம் அலை ஒன்று வந்தால், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்களின் பெயர்களைக் கூறுவதற்கும் நாம் தயங்கமாட்டோம்.

என டொக்டர் ஷெனால் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.