முன்னாள் பிரதியமைச்சர்களான அமீர் அலி மற்றும் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா ஆகியோர் பயங்கரவாதிகளுக்கும், பிரிவினைவாதிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கியமை தொடர்பில், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் விடயங்கள் அம்பலப்படுத்தப்பட்டன.

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன நேற்று (30) நான்காவது தடவையாகவும் ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் அளித்தார்.

சஹ்ரான் ஹாசிம் 2016 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் திகதி ´தேசிய தவ்ஹீத் ஜமாத்´ அமைப்பின் அலுவலகத்தில் ஆற்றிய உரை குறித்து அரச புலனாய்வு பிரிவு வெளியிட்டிருந்த அறிக்கை தொடர்பில் ஆணைக்குழு நேற்று கவனம் செலுத்தியது.

2016 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் திகதி முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ 4 முஸ்லிம் குடும்பங்களை சேர்ந்த 30 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புகளை கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.

அவ்வாறு அவர் தெரிவித்தமைக்கு எதிராக முஸ்லிம் அமைப்புகளும் அரசியவாதிகளும் தெரிவித்த கருத்துக்கள் புலனாய்வு பிரிவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதா? ஏன ஆணைக்குழு அவரிடம் வினவியது.

அதற்கு பதிலளித்த முன்னாள் புலனாய்வுத்துறை பணிப்பாளர், அந்த அறிக்கையில் முன்னாள் அமைச்சர்களான ரவுப் ஹக்கீம், ரிசாட் பதீயூதீன் அதேபோல் அப்போதைய கிழக்கு மாகாணத்தின் முதல்வராக இருந்தவரும், முஸ்லிம் பேரவையின் உறுப்பினருமான எம்.என்.அமின் ஆகியோர் அந்த கருத்துக்கு எதிராக தெரிவித்த விடயங்கள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், 2017 மார்ச் 10 திகதி அன்று, அலியார் சந்திப்பில் சஹ்ரான் ஹாஷிமின் தேசிய தவ்ஹீத் ஜமாத்துக்கும் சுன்னத் வால் ஜமாத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பின்னர் சஹ்ரானின் குழுவினருக்கு முன்னாள் பிரதி அமைச்சர் அமீர் அலியும் முன்னாள் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாவும் அரசியல் ரீதியாக ஒத்துழைப்பு வழங்கியதாக அவர் கூறினார்.

சஹ்ரான் ஹாசிம் தலைமையிலான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தொடர்பிலும், நாட்டில் முன்னெடுக்கப்பட்ட ஐ.எஸ் அமைப்பின் செயற்பாடுகள் குறித்து அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் மற்றும் புலனாய்வு பிரிவின் பிரதானி ஆகியோரை தெளிவுப்படுத்தியிருந்த போதும் அவர்கள் எடுத்த நடவடிக்கை என்ன என ஆணைக்குழு வினவியது.

இதற்கு பதிலளித்த நிலந்த ஜயவர்தன, அரச புலனாய்வு பணிப்பாளர் பிரிவு என்ற வகையில் எப்போதும் தகவல்களை வழங்கியிருப்பதாகவும், ஆனால் அது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை அவர்களிடமே கேட்கப்பட வேண்டும் என கூறினார்.

இருப்பினும், தேசிய பாதுகாப்பு பேரவை குறித்து கருத்து தெரிவிக்க ஜனாதிபதி ஆணைகுழு மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் மாத்திரம் வாக்குமூலம் பெறப்படும் மண்டபத்தில் இருக்க அனுமதி வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

அந்த கோரிக்கைக்கு பதிலளித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைமை நீதிபதி, ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் மாத்திரம் ஒரு சாட்சியை விசாரிக்க அனுமதிக்க முடியாது என கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக நிலந்த ஜயவர்தனவின் சாட்சியத்தை குறுக்கு விசாரணை செய்ய பல சட்டத்தரணிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதால், அவர்கள் இருக்கும்போதே நிலந்த ஜயவர்தனவின் முழு ஆதாரங்களையும் பெற வேண்டும் என ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.

(அததெரண)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.