இலங்கை மின்சார சபைக்கு அரசாங்கம் வழங்கிய எரிபொருள் சலுகையின் காரணமாக மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு, பாவனையாளர்கள் அவர்களின் பெப்ரவரி மாத மின்சாரக் கட்டணத்தின் அளவை செலுத்தலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நேற்று தீர்மானம் எட்டப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் பொறியியலாளர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். எனினும், இந்த சலுகை கால மின்சாரக் கட்டணத்தை இரண்டு மாதங்களுக்குள் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவைத் தீர்மானம் பின்வருமாறு.

கொவிட் 19 தொற்று நிலைமையின் காரணமாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் மே மாதம் வரையிலான காலப்பகுதிக்கான மின் கட்டணத்திற்காக மின்சார பாவனையாளர்களுக்கு வழங்கக்கூடிய நிவாரணம் தொடர்பான சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்கு மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அவர்களினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை 2020 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது கலந்துரையாடுவதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த குழுவின் சிபாரிசு திறைசேரியின் அதிகாரிகள் மூலம் தொடர்ந்தம் மதிப்பீடு செய்யப்பட்டு மின்சார பாவனையாளர்களுக்கான நிவாரணம் தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு அதன் அமைச்சரவைக் கூட்டத்தின் போது நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சரினால் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதற்கமைவாக நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்ட பின்வரும் பரிந்துரைகள் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

1. மார்ச், ஏப்ரல் மற்றும் மே முதலான மாதங்களில் ஒவ்வொரு மின்சாரக் கட்டணப் பட்டியலின் பெறுமதி பெப்ரவரி மாதத்தின் பெறுமதியிலும் பார்க்க அதிகமாயின் பெப்ரவரி மாதத்திற்கு சமமான தொகை வீதம் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்காக அறவிடுதல் மற்றும் அந்த மின்சாரக் கட்டண பணக் கொடுப்பனவை பூர்த்தி செய்வதற்காக 02 மாத கால அவகாசத்தை வழங்குதல்.

2. மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதம் ஆகிய 3 மாதங்களுக்கான மின்சார கட்டணத்தை தற்பொழுது செலுத்தியுள்ள பாவனையாளர்களுக்கு கட்டணத்திற்கான பற்றுச்சீட்டுக்களை விநியோகிக்கும் பொழுது அவர்களினால் கூடுதலாக செலுத்தியுள்ள தொகையை மீள செலுத்துவதற்கு இலங்கை மின்சார சபையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

3. மின்சார பட்டியலுக்கான கட்டணத்தை செலுத்துவதை தாமத்தினால் மின்துண்டிப்பு மேற்கொள்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.