வரலாற்று சிறப்புமிக்க புவனேகபாகு மன்னனுடைய அரச சபை கட்டிடம் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் இடைக்கால அறிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையின் ஊடாக 5 யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

01. கட்டிடத்தின் முன் பகுதியில் கூரை பகுதிக்கும் மற்றும் ஜன்னல்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதால் குறித்த பகுதிகளை தொல்பொருள் ரீதியில் பாதுகாக்க வாய்ப்புள்ளது. முழுவதுமாக சேதமடைந்துள்ள பின்பகுதியின் மரத் தூண்கள் மற்றும் செங்கல்கள் உள்ளிட்ட கட்டிடத்தின் பொருட்கள் பாதுகாப்பாக உள்ளது. அதன் காரணமாக இதற்கு முன்னர் தொல்பொருள் திணைக்களத்தினால் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளதால் மற்றும் பாதுகாப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதால் குறித்த பழைய பகுதிகளை மீண்டும் வழமைக்கு கொண்டு வர வாய்ப்புள்ளது. எனவே பழைய கட்டிடம் விரைவில் பாதுகாக்கப்பட வேண்டும்.

02. இந்த கட்டிடத்தை தொல்பொருள் திணைக்களம் கையகப்படுத்துதல்.

03. குறித்த இடத்தை விரிவாக்கும் திட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு பரிந்துரை செய்தல்.

04. இந்த அழிவுக்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்தல்.

05. அழிவுக்கு பொறுப்புக்கூற வேண்டிய நிறுவனம் மற்றும் நபர்கள் ஊடாக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான ஏற்பாடுகளைப் பெறுதல்.

பிரதமரின் ஆலோசனையின் பேரில் புத்த சாசனம் மற்றும் கலாச்சார அலுவல்கள் செயலாளரால் இந்த குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.