கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய முகம்மது ஹஸ்தூனின் மனைவியான சாரா என்றழைக்கப்படும் புலஷ்தினி இராஜேந்திரன், 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு தப்பிச் சென்றமை, இந்த தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இன்று தெரியவந்தது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைமை பொலிஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜுன மஹின்கந்த இன்று இதனைத் தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி சாய்ந்தமருது பகுதியில் குண்டுகள் வெடிக்கச் செய்யப்பட்ட வீட்டிற்குள் சாரா உயிரிழந்திருக்கலாம் என நம்பப்பட்டதாக அவர் கூறினார்.

எனினும், அவர் உயிரிழக்கவில்லை எனவும் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாகவும் ஜுலை 6 ஆம் திகதி தகவல் வழங்கும் ஒருவர் அறிவித்ததாக அர்ஜுன மஹின்கந்த தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி,மாங்காடு கிராமத்தில் சாரா மறைந்துள்ளதாக தகவல் கிடைத்ததெனவும் அவர் குறிப்பிட்டார்.

அந்த தகவல் கிடைத்தவுடன், தாம் மட்டக்களப்பிற்கு சென்றபோது அங்கு சந்தித்த ஒருவரிடம் சாரா தொடர்பில் மேலும் பல தகவல்களை உறுதிப்படுத்திக் கொண்டதாக தலைமை பொலிஸ் இன்ஸ்பெக்டர் கூறினார்.

2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒருநாளில் அதிகாலை 3 மணியளவில் மாங்காடு பகுதியில் கெப் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதை தாம் கண்டதாகவும் சாரா என சந்தேகிக்கப்படுகின்ற பெண்ணும் இரண்டு ஆண்களும் அதில் ஏறுவதைக் கண்டதாகவும் குறித்த நபர் தெரிவித்திருந்தார்.

குறித்த கெப் வாகனத்தின் முன்பக்க இடது ஆசனத்தில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி அபு பக்கர் இருந்ததைக் கண்டதாகவும் அவர் தெரிவித்ததாக அர்ஜுன மஹின்கந்த குறிப்பிட்டார்

சாரா தப்பிச் செல்வதற்கு தற்போது சிறையிலுள்ள சாராவின் மாமனார் ஒருவரும் வௌிநாட்டில் வசித்து வரும் அவரது சகோதரர் ஒருவரும் உடந்தையாக செயற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.