(நா.தனுஜா)

பொதுத்தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இதுவரை இடம்பெற்ற பிரசாரக்கூட்டங்களில் கண்காணிக்கப்பட்டவற்றில் அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்திய வெறுப்புணர்வு மற்றும் மக்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலான பேச்சுக்களை வரிசைப்படுத்தியிருக்கும் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம், அதனை ஓர் அறிக்கையாக வெளியிட்டிருக்கிறது.

அதுமாத்திரமன்றி இவைகுறித்த விழிப்புணர்வு செயற்திட்டமொன்றை ஆரம்பிக்கவிருப்பதாகவும் அறிவித்திருக்கிறது.

அதன்படி அபே ஜனபல கட்சியின் (எங்கள் மக்கள் சக்தி கட்சி) பதுளை மாவட்ட வேட்பாளர் அம்பலே ரத்ன தேரர் கடந்த ஜுன் 20 ஆம் திகதி நடைபெற்ற பிரசாரக்கூட்டமொன்றில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை வேதனைக்குட்படுத்தும் வகையிலான கருத்தொன்றை வெளியிட்டமை,
ஜுன் 20 ஆம் திகதி அம்பாறையில் நடைபெற்ற கூட்டத்தில் கருணா அம்மான் 2000 - 3000 இராணுவ வீரர்களை ஆனையிறவில் ஒரே இரவில் கொன்றதாகக் கூறியமை,
ஜுன் 22 ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் சிலரால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி வேட்பாளர் மங்களா சங்கருக்கு அவதூறை ஏற்படுத்தும் வகையிலான பதிவுகள் சமூகவலைத்தளங்களிலும் பகிரப்பட்டமை,
ஜுன் 26 ஆம் திகதி கடுவெலவில் நடைபெற்ற கூட்டத்தில் சிங்கள பௌத்த நாட்டைப் பாதுகாக்கக்கூடியவர்களுக்கு மாத்திரம் வாக்களிக்குமாறு டான் பிரசாத்தினால் வெளியிடப்பட்ட கருத்து,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த தம்புள்ளை மேயர் ஜாலிய ஒபதாவினால் ஐக்கிய தேசியக் கட்சி கவுன்சிலர் நிலக்ஷி ஜயவர்தனவிற்கு எதிராக இருவேறு ஊடகவியலாளர் சந்திப்புக்களில் மேற்கொள்ளப்பட்ட பாலியல் ரீதியான விமர்சனங்கள்.
ஜுலை 7 ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வன்னி மாவட்ட வேட்பாளர் ஜானக நந்தகுமார வன்னி மாவட்டம் முஸ்லிம்களுக்கு மாத்திரம் நன்மைகளைப் பெற்றுக்கொடுக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதியொருவரால் நிர்வகிக்கப்படுவதால் அங்குள்ள தமிழ் மற்றும் சிங்கள மக்கள் சிக்கல்களை எதிர்நோக்குவதாக வெளியிடப்பட்ட கருத்து,
ஜுலை 8 ஆம் திகதி அபே ஜனபல கட்சியின் (எங்கள் மக்கள் சக்தி கட்சி) வேட்பாளர் அத்துரலியே ரத்ன தேரரினால் முஸ்லிம்களை அச்சுறுத்தும் வகையில் வெளிப்படுத்தப்பட்ட கருத்து,
ஜுலை 10 ஆம் திகதி குருணாகலையில் பொதுஜன பெரமுன வேட்பாளர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவினால் முஸ்லிம்களை அச்சுறுத்தும் விதமாக வெளியிடப்பட்ட கருத்து,
ஜுன் 10 ஆம் திகதி குருணாகலையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் குழந்தைகள் இன்மையை சுட்டிக்காட்டி சஜித் பிரேமதாஸ மற்றும் அவரது மனைவியை அவமதிக்கும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட கருத்து,
ஜுலை 20 ஆம் திகதி அபே ஜனபல கட்சியின் (எங்கள் மக்கள் சக்தி கட்சி) வேட்பாளர்களான சில பௌத்த தேரர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொள்கைப் பிரகடனத்திற்கான வெளிப்பாடாக 'தமிழ்மக்கள் நாட்டைப் பிரிக்கவேண்டுமெனக் கோரினால் வடக்கு, கிழக்கில் இரத்த ஆறு ஓடும்' என்று வெளியிட்ட கருத்து என்பன இதுவரையான தேர்தல் பிரசார காலகட்டத்தில் மிகமுக்கியமாக அவதானிக்கப்பட்ட வெறுப்புணர்வு மற்றும் பிரிவினையை ஏற்படுத்தும் பேச்சுக்களாக அடையாளங்காணப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் தேர்தல் பிரசாரங்களின் போது இடம்பெறும் இத்தகைய வெறுப்புணர்வு மற்றும் பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலான பேச்சுக்களால் ஏற்படத்தக்க தாக்கங்கள்,
அதனால் எந்தப் பிரிவினருக்கு எத்தகைய பாதிப்புக்கள் ஏற்படும் என்பது பற்றிய விழிப்புணர்வு செயற்திட்டமொன்றை ஊடகங்களின் உதவியுடன் முன்னெடுக்கவிருப்பதாகவும் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் அறிவித்திருக்கிறது.
Blogger இயக்குவது.