COVID-19 தொற்றை இல்லாதொழித்து மக்களை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே பிரதமர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

சுகாதாரத்துறையின் தலைமை அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.

நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் இதன்போது ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதன் பின்னர், அவர்களுடன் தொடர்புடைய 3,700 பேருக்கு இதுவரையில் PCR சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இதன்போது சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி குறிப்பிட்டார்.

இவர்களில் புனர்வாழ்வு பெற்ற 443 பேருக்கும் 63 அலுவலகப் பணியாளர்களுக்கும் அவர்களுடன் நெருங்கிப் பழகிய 26 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அதற்கமைய, 530 பேர் மாத்திரமே கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களுடன் பழகிய கொத்தணி தொற்றாளர்களை அடையாளம் காணக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

இதனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளைத் தொடர்ந்தும் பின்பற்றுமாறு சுகாதா அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி சுட்டிக்காட்டினார்.

இதன்போது, தேவையற்ற விதத்தில் அச்சமடைய வேண்டிய அவசியம் இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

பெரும்பான்மை பலம் தொடர்பில் இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெறுவதற்கான எண்ணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.