இலங்கையில் 4 ஜனாதிபதிகள், 7 பிரதமர்களை உருவாக்கிய ஐக்கிய தேசியக் கட்சி இல்லாமல் -  73 ஆண்டுகளுக்கு பிறகு கூடுகிறது பாராளுமன்றம்!

இலங்கையின்  9ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் நாளை 20 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்ச மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள 225 உறுப்பினர்களில் 223 பேர் அன்றைய தினம் சபை அமர்வில் பங்கேற்கவுள்ளனர்.

எமது மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக்கட்சி ஆகியன தேசியப்பட்டியலுக்கான உறுப்பினர் விபரங்களை இன்னும் வழங்காததாலேயே 223 பேர் முதலாவது அமர்வில் கலந்துகொள்ளவுள்ளனர். இவ்விரு கட்சிகள் நாளையும் பெயர் விபரங்களை சமர்ப்பிப்பது கேள்விக்குறி என்பதால் பழமையான அரசியல் கட்சியொன்று இல்லாமல் சபை கூடும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

தேசப்பிதா முன்னாள் பிரதமர் அமரர் டி.எஸ். சேனாநாயக்க தலைமையில் 1946 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய தேசியக்கட்சியானது 1947 இல் நடைபெற்ற முதலாவது நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. 

அதன்பின்னர்1952,1956,1960,1965,1970,1977,1989,1994,2000,2001,2004, 2010, 2015 மற்றும் 2020 களில் நடைபெற்ற தேர்தல்களில் ஐக்கிய தேசியக்கட்சி போட்டியிட்டுள்ளது. இதில் 8 தேர்தல்களில் அக்கட்சி வெற்றிபெற்றுள்ளது. 1956 ஆம் ஆண்டுதான் பெரும் தோல்வி ஏற்பட்டது. இருந்தாலும் நாடாளுமன்ற எட்டு பேர் தெரிவாகினர்.

எனினும், இம்முறைதான் அக்கட்சியால் தேர்தல் மூலம் ஒரு ஆசனத்தைக்கூட வெல்லமுடியாமல்போனது. தேசியப்பட்டியல் ஊடாகவே ஓர் ஆசனம் கிடைத்துள்ளது. எனவே, இலங்கையில் பழமையான அரசியல் கட்சிகளுள் ஒன்றான ஐக்கிய தேசியக்கட்சிக்கு மக்கள் ஒரு ஆசனத்தைக்கூட வழங்காத சந்தர்ப்பமாகவும், ஐக்கிய தேசியக்கட்சி இல்லாமல் நாடாளுமன்றம் கூடும் முதல் சந்தர்ப்பமாகவும் 9 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் அமையவுள்ளது.

இலங்கை அரசியல் வரலாற்றில் நான்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளையும், 7 பிரதம அமைச்சர்களையும் ஐக்கிய தேசியக்கட்சி உருவாக்கியமை குறிப்பிடத்தக்கது.

(சிலவே ஐ.தே.க. தேசியப்பட்டியல் உறுப்பினர் பெயரை அறிவித்து சபை அமர்வில் அக்கட்சி உறுப்பினர் பங்கேற்றால்கூட, ஒரு உறுப்பினருடன் ஐ.தே.க. சபையில் பங்கேற்ற முதல் சந்தர்ப்பம்கூட அதுவாகவே இருக்கும்)

- ஊடகவியலாளர் சனத் -

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.