மாகாணசபைத் தேர்தல் முடிவடையும் வரை ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையில் மாற்றங்களை ஏற்படுத்தப் போவதில்லை என்று அந்தக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

சிறிகொத்தவில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடலின்போதே அவர் இந்த முடிவை வெளியிட்டார்.

இவ்விடயம் தொடர்பாக ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியுள்ளதாவது, 'இன்று ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய தலைமைத்துவமொன்று அவசியமாகியுள்ளது. இதற்கான முதற்படியை நாம் எடுத்துள்ளோம்.

புதிய சிந்தனைகளைக் கொண்ட இளைய தலைமுறையினருக்கு இந்தக் கட்சியை ஒப்படைக்க வேண்டும்.

இதன் ஊடாக தான் கட்சியை முன்கொண்டு செல்ல முடியும். தற்போது நாம் மாகாணசபைத் தேர்தலுக்கு பிரதானமாக தயாராக வேண்டும்.

இந்தத் தேர்தல் முடிவடைந்தவுடன்தான் கட்சியின் அடுத்தத் தலைவர் யார் என்பதை தீர்மானிக்க முடியும்.

இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இன்று மத்தியக்குழுக் கூட்டத்தில் குறைந்தளவிலான உறுப்பினர்களே இருக்கிறார்கள். இவை அனைத்தையும் உணர்ந்து தான் நாம் செயற்படவேண்டும்' என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.