இஸ்ரேல்-ஐக்கிய அரபு இராச்சியம் இடையே கையெழுத்தாகியுள்ள தூதரக ஒப்பந்தத்துக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

1948-ம் ஆண்டு இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வளைகுடா நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக போரில் ஈடுபட்டன. இந்த போரில் இஸ்ரேல் வெற்றி பெற்றது. எனினும் இஸ்ரேலை ஒரு தனி நாடாக அரபு நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதனால் அந்த நாட்டுடன் தூதரகம், வர்த்தகம் என எந்த விதமான உறவுகளையும் அரபு நாடுகள் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதுமட்டுமின்றி அரபு நாடுகள் இஸ்ரேலுடன் தொடர்ந்து மோதல் போக்கை கையாண்டு வருகின்றன.

இந்த நிலைமையிலேயே அமெரிக்காவின் பூரண தலையீட்டுடன் இஸ்ரேல் - ஐக்கிய அரபு இராச்சியம் சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இதுபற்றி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், 'மிகப் பெரிய செய்தி. இஸ்ரேல், ஐக்கிய அரபு இராச்சியம் என்னும் இரு பெரும் நண்பர்கள் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க சமாதான உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது' என குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் இடையே ஏற்பட்டுள்ள இந்த தூதரக ஒப்பந்தத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாலஸ்தீனம் இது ஒரு தேசத்துரோக நடவடிக்கை என தெரிவித்துள்ளது.

மேலும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள தங்கள் நாட்டு தூதரை நாடு திரும்பும்படி பாலஸ்தீன அரசு உத்தரவிட்டுள்ளது.

அதேபோல் இஸ்ரேலும், ஐக்கிய அரபு இராச்சியமும் தூதரக உறவை தொடங்கி இருப்பதை ஈரான், துருக்கி ஆகிய நாடுகளும் கடுமையாக கண்டித்துள்ளன.

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஐக்கிய அரபு இராச்சியம் உடனான உறவுகளை இயல்பாக்குவதை பாலஸ்தீனர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். இதன் மூலம் இனி வளைகுடா நாடுகளின் உள்விவகாரங்களில் இஸ்ரேல் தலையிட முயற்சிக்கும். இது ஏற்கத்தக்கது அல்ல' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.