(செ.தேன்மொழி)

அரசாங்கத்திற்கு மக்கள் மூன்றில் இரண்டு அல்ல ஆறில் ஐந்து பெரும்பான்மையை பெற்றுக் கொடுத்தாலும் , அவர்கள் அரசியலமைப்புக்கு அடிப்பணிந்தே செயற்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவுச் செய்யப்பட்டுள்ள ஹேஷான் வித்தானகே தெரிவித்தார்.

இதுவரைகாலமும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்கள் தொடர்பில் அமைச்சு ஒதுக்கப்பட்டு வந்த போதிலும் இம்முறை அந்த அமைச்சு தொடர்பில் எந்த விளக்கமும் இல்லாமல் இருக்கின்றது. இது தொடர்பில் அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும். என கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

ஊடகங்களிலும் , சமூகவளைத்தளங்கள் ஊடாகவும் போலி தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் மக்கள் தெளிவுடன் செயற்பட வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தியை மக்கள் பிரதான எதிர்கட்சியாக தெரிவுச் செய்துள்ள நிலையில் யாருக்கும் அடிபணியாத நிலையில் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் எதிர்கட்சிக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை நிறைவேற்ற நாங்கள் அனைவரும் எதிர்பார்த்திருக்கின்றோம். இந்நிலையில் இரத்திகபுரி மாவட்டத்தில் எனது வெற்றியை உறுதிப்படுத்திய அனைவருக்கும் இத்தருணத்தில் எனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மக்கள் மூன்றில் இரண்டு அல்ல ஆறில் ஐந்து பெரும்பான்மையை அரசாங்கத்திற்கு பெற்றுக் கொடுத்தாலும். அரசாங்கம் அரசியலமைப்புக்கு அடிப்பணிந்தே செயற்பட வேண்டும். நல்லாட்சி அரசாங்கத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு அமைச்சு , மகாவலி அமைச்சு என அமைச்சுகளை பொறுப்பேற்றிருந்தார். தற்போது ஜனாதிபதியால் அமைச்சுகளை பொறுப்பேற்க முடியாது என்று அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சை பொறுப்பேற்றுள்ளமை தவிர்க்கப்பட வேண்டிய செயற்பாடாகும். மக்கள் விணைத்திறன் மிக்க நாட்டை உருவாக்குவார் என்ற நம்பிக்கையிலேயே கோதாபயவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இந்நிலையில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அவர் செயற்படுவார் என்று நாங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை.

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஆளும்தரப்பினர் பேச்சுகளை ஆரம்பித்துள்ளனர். அதற்கான அவசியம் என்ன ? 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சில விடயங்களில் திருத்தங்கள் ஏதாவது செய்வதாக இருந்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கலாம். ஆனால், 19 ஆவது அரசியலமைப்பை முற்று முழுதாக இல்லாமலாக்குவதற்கு இடமளிக்க கூடாது. இதனூடாக தகவலறியும் உரிமை , சுயாதீன ஆணைக்குழுக்கள் என்பவற்றை இல்லாமலாக்கவும் அரசாங்கம் முயற்சிக்கலாம்.

ஒரு அரசாங்கம் தனக்கு ஏற்றவகையில் அமைச்சுக்களை நியமிப்பது தொடர்பில் நாங்கள் மாற்றுக் கருத்துக்களை தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால், இதுவரைகாலமும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்கள் தொடர்பில் அமைச்சு ஒதுக்கப்பட்டு வந்த போதிலும் இம்முறை அந்த அமைச்சு தொடர்பில் எந்த விளக்கமும் இல்லாமல் இருக்கின்றது. இது தொடர்பில் அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும். இதேவேளை இது வேறு எந்த இராஜாங்க அமைச்சுக்குள்ளாவது மறைந்துக் கொண்டுள்ளதா? என்பது தொடர்பிலும் அவர்கள் விளக்கமளிக்க வேண்டும்.

ராஜபக்ஷர்களின் முகாம்களில் உள்ள சிலர் கடந்தகாலங்களில் சுயாதீனமாக கருத்து தெரிவித்ததனால் இன்று அவர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தியுள்ளனர். அதற்கமைய அமைச்சர் வாசுதேவ நாணாயக்காரவுக்கு வழங்கப்பட்ட அமைச்சில் பொறுப்புகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எப்போதுமே வழங்கப்பட்டு வழந்த வீடமைப்பு திட்டம், இம்முறை பெற்றுக் கொடுக்கப்படவில்லை.

இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சு எங்கு இருக்கின்றது என்பது கூட அவருக்கு தெரியவில்லை. ராஜபக்ஷர்களின் குடும்பத்திலிருந்து இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள ஐந்து பேருக்கும் அமைச்சர் , இராஜாங்க அமைச்சு பதவிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. அது தொடர்பில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும். நேர்மையாக உரையாற்ற கூடியவர்களே பாராளுமன்றத்திற்கு தெரிவுச் செய்யப்பட வேண்டும் என்பதே எமது கருத்தாகும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.