(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )

நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களை நீக்க அன்று எதிர்க்கட்சியில் இருந்து இரண்டு கைகளையும் தூக்கி ஆதரித்தவர்கள் இன்று 19 ஆம் திருத்தத்தை நீக்க காரணம் என்ன ? 19 ஆம் திருத்தத்தை நீக்குவதென்றால் சுயாதீன ஆணைக்குழுக்கள் அனைத்தும் நீக்கப்படப்போகின்றதா என பிரதமர் பதில் கூற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பல்லின மக்கள் வாழும் நாட்டில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கையில் பயணிக்க முடியாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான முழுநாள் விவாதம் இன்று சபையில் எடுத்துக்கொண்டபோது விவாதத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல இவற்றைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததானது,

கடந்த 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்திற்கு கிடைத்த மக்கள் ஆணையின் மூலமாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையின் அதிகாரத்தை குறைக்க முடிந்தது. இதன்போது நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல்ல வேண்டும் என்ற நிலைமை இருந்தது.

எனவே நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்காது  நிறைவேற்று அதிகாரங்களை குறைக்கும் நடவடிக்கை எடுத்தோம். நீதிமன்ற அனுமதியை பெற்று பிரதமருக்கு அதிகாரங்களை ஒப்படைத்தோம். இந்நிலையில் 19 ஆம் திருத்தத்தை நாம் கொண்டுவந்த நேரத்தில் பாராளுமன்றத்தில் சகலரும் ஆதரவு வழங்கினர். சிலர் வரவில்லை, அதற்கான காரணம் எனக்கு தெரியாது.

ஆனால் இன்று ஆட்சியில் இருக்கும் பலர் இரண்டு கைகளையும் தூக்கி ஆதரவை வழங்கினர். அமைச்சர் தினேஷ் குணவர்தன அன்று திருத்தங்களை கூட முன்வைத்தார். அவ்வாறு இருந்தவர்கள் இன்று ஏன் 19 ஆம் திருத்த சட்டத்தை நீக்க நினைக்கின்றீர்கள். 19 ஆம் திருத்தத்தை ஏன் நீக்க நடவடிக்கை எடுக்கின்றீர்கள் என்பதற்கு பிரதமர் ஒரு பதில் கூற வேண்டும்.

19 ஆம் திருத்தத்தை அவசர அவசரமாக நீக்க என்ன காரணம், அதுமட்டும் அல்ல இப்போது நீங்கள் எடுத்துள்ள தீர்மானத்தில் சுயாதீன ஆணைக்குழுக்களை நீக்கப்போகின்றீர்களா? அதேபோல்  ஒரு நாடு ஒரு சட்டம் என ஜனாதிபதி தனது உரையில் கூறினார்.

அப்படியென்றால் வழக்காறு சட்டங்கள் அனைத்தையும் நீக்கப்போகின்றீர்களா? யாழ்ப்பாண தேசவழமைச் சட்டம், கண்டிய சட்டம், முஸ்லிம் சட்டம், ஏனைய வழக்காறு சட்டங்களை நீக்கப்போகின்றீர்களா? ஒரு நாடு ஒரு சட்டம் என்ற கொள்கையில் பயணிக்க முடியாது. இந்த நாட்டில் பல இனங்கள், பல மதங்ககள் உள்ளன. அவ்வாறு இருக்கையில் ஒரு நாடு ஒரு சட்டத்தில் பயணிக்க முடியாது.

மேலும் கொவிட் வைரஸ் நெருக்கடிகள் குறித்து ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்தில் ஒரு வார்த்தையேனும் இல்லை. கொவிட் நெருக்கடிக்கு தீர்வு இல்லை, தீர்வு மட்டும் அல்ல ஒரு வார்த்தை கூட அவரது கொள்கை பிரகடனத்தில் இல்லை.

 ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்தில் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் என எதுவுமே இல்லை. மக்கள் எதிர்பார்க்கும் எந்தவொரு தீர்வுகளும் வழங்கப்படப்போவதில்லை என்பதா இதன் வெளிப்பாடு என்பதை அரசாங்கம் கூற வேண்டும். அரசாங்கம் மக்களை ஏமாற்றுகின்றது, வேலைவாய்ப்பு தருவதாக தேர்தல் காலத்தில் கூறியவர்கள் இன்று மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.