தேசிய மக்கள் சக்தியின் (NPP) கம்பஹா மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் ஷான் மொஹமட், சியன ஊடக வட்டத்திற்கு வழங்கிய விசேட நேர்காணல்

கேள்வி : உங்களைப் பற்றி சிறிது கூறுங்கள்

பதில் : நான் மாவனெல்ல, ஹெம்மாதகமையை சேர்ந்தவன். தொழில் ரீதியாக வியாபார ஆலோசகர். மிகவும் இளைய வயதில் இருந்தே மக்கள் விடுதலை முன்னணியில் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறேன். இதற்கு முன்னர் கொழும்பை மையமாக வைத்தே அரசியல் செய்து வந்தேன். ஆனால் இம்முறை கம்பஹாவிலிருந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் செல்ல வேண்டும் என்பது கட்சியின் தேவையாக இருந்தது. முதலாவது காரணம், ஏனென்றால் ஆளும் தரப்பு சார்பில் எந்தவொரு முஸ்லிம் வேட்பாளர்களும் நிறுத்தப்படவில்லை. அதே போல் பிரதான எதிரணியும் இரு கட்சிளாக பிரிந்து இரு தரப்பிலும் முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கிடையே மோதல் இருப்பது போன்று காத்திரமான விடயமொன்றை செய்ய வேண்டும் என்ற நோக்கம் இருப்பதாக தெரியவில்லை.

இதற்கு முன்பும் ஜேவிபியினாலேயே கம்பஹாவிலிருந்து முஸ்லிம் ஒருவர் பாராளுமன்றம் அனுப்பப்பட்டார். இங்கிருக்கும் முஸ்லிம் சமூகத்தின் வாக்குப்பலத்தினை பார்க்கும் போது இலகுவாக முஸ்லிம் ஒருவரை பாராளுமன்றம் அனுப்புவதற்காக இருக்கின்ற ஒரே வழி ஜேவிபி தான். 

கேள்வி : கம்பஹா மாவட்ட முஸ்லிம்களின் வாக்குப்பலம் பற்றி?

பதில் : இங்கு மலே சமூகத்தினரையும் சேர்த்து 120,000 இஸ்லாமியர்கள் இருக்கின்றனர். அதிலும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்கள் இருப்பது அத்தனகல்ல தேர்தல் தொகுதியிலாகும்.அதற்கு அடுத்ததாக நீர்கொழும்பு என நினைக்கிறேன். கிட்டத்தட்ட 5.01 வீதமான முஸ்லிம்கள் இங்கு வாழ்வதுடன் அவர்கள் பெரும்பான்மையின மக்களுடன் கலந்து வாழ்கின்றார்கள். பெரும்பான்மையினரைப் புரிந்து கொள்ளக்கூடிய எம்மவர்களே அதிகாரங்களுக்கு வர வேண்டும். அதுவே இனவாதம் பரவி வரும் சூழ்நிலையில் அவசியமானது.

கம்பஹாவில் ஜேவிபி இம்முறை NPP என்ற கூட்டணியாக போட்டியிடுகிறோம். மொட்டு கட்சியில் முஸ்லிம் வேட்பாளர்கள் கூட இல்லை. அதனை விடுவோம். அடுத்தவொரு கட்சியில் பல வருடங்களாக மாகாண சபை உறுப்பினர் பதவியை வகித்த ஒருவரை நிறுத்தியிருக்கிறார்கள். அவர் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மூலம் பதவிகளை பெற்று பிறகு இறுதி நேரத்தில் வேறொரு கட்சி சார்பாக மனுத்தாக்கல் செய்தவர். சிலர் அவர் காசு வாங்கி அவ்வாறு செய்ததாக கூறுகிறார்கள். 

அடுத்தவர் அரசியல் ரீதியாக சமூகத்தில் அதிகம் அறியப்படாதவர். முஸ்லிம் காங்கிரஸ் மூலமாக பதவியை பெற்று பல வருடங்களாக மாகாண சபையில் இருந்தவருக்கு அப்பதவியை வைத்து மாற்று சமூகத்தவர்களுக்கு பாலமாக இருக்க தெரிந்திருக்கவில்லை. அந்த பதவியை வைத்து இன உறவினை அவரால் கட்டியெழுப்பியிருக்கலாம்.

கேள்வி : இம்முறை உங்களால் எமது மாவட்டத்தில் இரு ஆசனங்களை பெற்றுக்கொள்ள முடியுமா? 

உங்களுக்கு தெரியும், சென்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் நாம் 105,000 அளவான வாக்குகளை பெற்றோம். நாம் இந்த பொதுத்தேர்தலில் 120,000 அளவு வாக்குகளை பெற்றால் நிச்சயமாக இரு எம்பிகளை வெல்லலாம். இங்கிருக்கும் முஸ்லிம் வாக்காளர்கள் முதலாவது விருப்பு வாக்கினை விஜித ஹேரத் அவர்களுக்கும் இரண்டாவதினை எனக்கும் அளித்தால், கிட்டத்தட்ட 30,000 வாக்குகள் அவ்வாறு விழும் பட்சத்தில் நிச்சயம் என்னால் இரண்டாவது இடத்தினை பெற முடியும். அவ்வாறு சிறு தொகை வாக்குகளினால் முஸ்லிம் எம்பி ஒருவரை பெறுவதற்கான இலகு வழி இருப்பது எம்மிடம் தான். 

ஒரு முஸ்லிம் ஒருவரை வெல்ல வைப்பதற்காக வாக்களியுங்கள் என்று எமது கட்சி சார்பாக கேட்க முடியாது. அவ்வாறு கேட்கும் எவருக்கும் வாக்களிக்க வேண்டாம் என்றே கூறுகிறோம். இதுவரை அவ்வாறு கேட்டு வாக்குகளை பெற்றவர்கள் இன நல்லுறவுக்காக என்ன செய்திருக்கிறார்கள்? அவ்வாறு செய்யக்கூடிய புத்திஜீவிகளுக்கு ஏன் சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை. 

கஹட்டோவிட்ட என்பது கம்பஹா மாவட்டத்திலுள்ள பெறுமதி மிக்க ஊர். மாவட்டம் சார்பாக முஸ்லிம் ஒருவர் பாராளுமன்றம் செல்வதற்கு சகல தகுதியும் உடையவர்களைக் கொண்ட ஊர் கஹட்டோவிட்ட. குறைந்தது மாகாண சபையில் இவ்வூர் ஒருவருக்கு இரு வருடங்களாவது வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு தகுதியுடையவர்கள் வந்தால் நாங்கள் இடம் கொடுக்கவே வேண்டும். 

கேள்வி : ஏனைய கட்சிகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில் : பிரதான கட்சிகள் நான்கினை எடுப்போம். அவற்றில் இருப்பவர்களைப் பாருங்கள். அடிக்கடி கட்சி தாவுபவர்களை அதிகம் காணலாம். சிலர் முஸ்லிம், முஸ்லிம் என்று கூறி சமூகத்திற்கு சேவை செய்வதற்காக என்று கூறி ஆளும் தரப்பில் இணைந்தவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் பணத்திற்காக விலை போக கூடியவர்கள் தான்.

மேலும் ஒரு விடயத்தினை கூற வேண்டும், நான் கேள்விப்பட்டேன். ஆளும் கட்சியின் அமைச்சர் ஒருவர் உங்களது ஊருக்கு வந்திருக்கிறார். அவர்களுக்கு ஆதரவான முஸ்லிம்களை ஒன்று சேர்த்தார்கள். கதவுகளையும் ஜன்னல்களையும் மூடி, வீடியோ எடுப்பதற்கான சந்தர்ப்பத்தினை தடுத்து ஆட்களை பயம்காட்டிவிட்டு போய்விட்டார். இதனை கட்டாயம் குறிப்பிட வேண்டும். அன்று தெரிந்திருந்தால் உங்களது ஊரிலுள்ள பிரச்சார மேடையில் வைத்தே பேசியிருப்பேன். 

இரு விடயங்கள் உள்ளன. ஒன்று மீள் எழும் யுக்தி அடிப்படையில் பணிந்து செல்லுதல். ஆனால் நாம் அவ்வாறு செல்லும் அளவுக்கு தவறு செய்தவர்கள் அல்லர். ஒருவர் உங்களது வீட்டிற்கு வந்து உங்களது சகோதரியின் அல்லது தாயின் கைகளை பிடித்து இழுத்தால் நீங்கள் எவ்வாறு எதிர்வினை புரிவீர்களோ அவ்வாறு தான் குறித்த அமைச்சர் அப்படி பேசும் போது எதிர்வினையாற்றி இருக்க வேண்டும். நீங்கள் வாக்களிக்காவிட்டால் உங்களது ஊருக்கு வீதிகளை போட மாட்டோம். குப்பைகளை அல்ல மாட்டோம் என்று கூறியது உண்மையில் எனக்கு ஆத்திரம். 

நாங்கள் தேவையற்ற பிரச்சினைகளுக்கு செல்லும் சமூகம் அல்ல. இந்த சம்பவத்தினை வெட்கமின்றி வெளியில் வந்து சொல்கிறார்கள். 120,000 இற்கும் அதிகமான மக்களைக் கொண்ட ஒரு சமூகம் சார்பில் அபேட்சகர் ஒருவரினை நிறுத்துவதற்கு ஏன் முடியவில்லை என்று யாராவது அங்கு கேட்டார்களா? 

இங்கு அவ்வாறு பேசிவிட்டு சென்றவர் நாளை உங்களது தாயினது அல்லது சகோதரியினது கைகளை பிடித்து இழுத்தால் என்ன செய்வீர்கள்? இதனை அவர்களிடம் கேட்க வேண்டும். அவ்வாறு கேட்டிருந்தால் குறைந்தது என்ன நடந்திருக்கும். கூட்டம் இரத்தாகி எல்லோரும் சென்றிருப்பார்கள். அதன் பிறகு எமது பருப்பு இவர்களிடம் வேகாது என்று உணர்ந்திருப்பார்கள். 

அதே போன்று ஏனை இரு கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களும் இவர்களோடு மோத தைரியமில்லாதவர்கள். இப்போது கூட எந்த முஸ்லிம் ஊரில் சரியாக பாதைகள் இருக்கின்றன? குப்பைகள் எடுக்கப்படுகின்றன? 

தமக்கு வாக்களிக்காவிட்டால் பிறப்பு சான்றிதழ், அடையாள அட்டை தர முடியாது என்று அரசாங்கத்திற்கு கூற முடியுமா? அங்கு சென்ற புத்திஜீவிகள் அதனை கேட்கவில்லையா? குப்பை எடுக்காவிட்டால் எல்லாவற்றையும் கொண்டு போய் கண்டி வீதியில் கொட்ட வேண்டும். 

கேள்வி : இனவாதத்தினை எவ்வாறு எதிர்கொள்வது?

பதில் : முதலாவது, பெரும்பான்மை பொது மக்களின் ஆதரவு தேவை. கொள்கையளவில் இனவாதத்திற்கு எதிராக போராடக்கூடியவர்களே தேவை. அந்த விடயத்தில் வெளிப்படையாகவும் உள்ரங்கமாகவும் இருப்பவர்களே ஜேவிபி மற்றும் NPP.  

மொட்டுக்கட்சியில் போடப்பட்டிருப்பவர்கள் மிக மோசமான இனவாதிகள். இவ்வாறான இனவாதிகளுக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் வழங்கிய நீங்கள் ஏன் ஒரு முஸ்லிமுக்கு இடம் வழங்கவில்லை என்று அந்த புத்திஜீவிகள் கேட்கவில்லையா?  

நீங்கள் கேட்பீர்கள், நாங்கள் அவர்களுடன் மோதிக்கொண்டா தோற்கடிக்க வேண்டும் என்று. நாம் முதலில் பெரும்பான்மையினத்தினை ஒன்று சேர்க்க வேண்டும். அவர்களை மரியாதையாக நடாத்த வேண்டும். அவர்களை விளங்கிக்கொள்ள வேண்டும். அவ்வாறானவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டால் தான் அதனை செய்ய முடியும். 

இனவாதம் அந்த மக்களின் அடி மனதிற்கு போய் சேர்ந்து விட்டது. அதனை இல்லாமல் செய்வது இலகுவான விடயமல்ல. அதற்கு செய்ய வேண்டியது, நாம் அவர்களுக்குள்ளேயே இனவாதத்ததிற்கு எதிரானவர்களை பலப்படுத்த வேண்டும். நாமும் எமக்குள் இனவாதம் எழுவதனை இல்லாமல் செய்ய வேண்டும். 

கேள்வி : இறுதியாக என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில் : கம்பஹா மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதி தெரிவாக வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் எந்த பிழையும் இல்லை. ஆனால் அவ்வாறு வர வேண்டிய நபருக்கு சில பண்புகள் இருக்க வேண்டும். விசேடமாக அவர் ஏனைய சமூகத்தினருடன் கருத்துக்களை பரிமாறக்கூடியவராக, அவர்களுடைய கருத்துக்களை விளங்கக்கூடியவராக, சேர்ந்து வேலை செய்யக்கூடியவராக, அவர்களுடைய பிரச்சினைகளையும் விளங்கிக்கொள்ளக் கூடியவர்களாக இருக்க வேண்டும். 

நான் அவ்வாறான ஒரு பாசறையில் வளர்ந்தவன் என்பதனால் அவற்றை செய்வதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன. அதிகமானவர்கள் விலை போகக்கூடியவர்கள். சிலர் வேட்புமனு தாக்கல் செய்யும் சந்தர்ப்பத்தில் கூட விலை போயிருக்கிறார்கள். அவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் கூடிய தொகைக்கு விலை போவார்கள். 

சிலர் தமது சுயநலனை மறைப்பதற்காக, ஆட்சியுடன் இருக்கும் கட்சியுடன் சேர்ந்து போக வேண்டும் என்பார்கள். அவர்கள் இதற்கு முன்னரும் இதனையே செய்தார்கள். இதற்கு பின்னரும் செய்வார்கள். இந்த அரசியல் தோற்கடிக்கப்பட வேண்டும். அவர்களை விட பெரும்பான்மை சமூகத்திலுள்ள முற்போக்கு சிந்தனையுள்ளவர்களை நியமிப்பது எல்லோருக்கும் நல்லது. கம்பஹா மாவட்டத்தில் அத்தனகல்ல தேர்தல் தொகுதி மிகவும் முக்கியமானது. 

முதலாவது, உங்களது பயமுறுத்தலுக்கு நாம் ஆளாகவில்லை என ராஜபக்ச அணிக்கு நாம் உணர்த்த வேண்டும். உங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றால் எங்களை மனிதர்களாக மதிக்க வேண்டும் என்று கூற வேண்டும். அடிபணிந்து செல்லும் நிலைக்கு கம்பஹாவில் நாம் அனைவரும் இணைந்து சிறந்த பதிலை வழங்க வேண்டும். இதனை ஏனைய சமூகங்களுடன் சேர்ந்தே செய்ய வேண்டும். 
Blogger இயக்குவது.