(இராஜதுரை ஹஷான்)

நல்லாட்சி அரசாங்கத்தினால் காலம் தாழ்த்தப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் பழைய முறைமையில் விரைவாக நடத்த வேண்டும். 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை இரத்து செய்வது இலகுவான காரியமல்ல, மாகாண சபை முறைமையினை நீக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மாகாண சபை உறுப்பினர் ஒன்றியத்தின் தலைவர் காஞ்சன ஜயரத்ன தெரிவித்தர்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இரண்டு பிரதான தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு மாகாண சபை உறுப்பினர்கள் வழங்கிய ஒத்துழைப்பு இன்றியமையாததாகும். மாகாண சபை உறுப்பினர் பதவி வகித்தவர்கள் 28 பேர் இடம்பெற்று முடிந்த பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்கள்.

நல்லாட்சி அரசாங்கத்தினால் காணாமலாக்கப்பட்ட மாகாண சபை தேர்தலை அரசாங்கம் பழைய முறையில் விரைவாக நடத்த வேண்டும். இதன் பொறுப்பு பாராளுன்றத்துக்கு தெரியாகியுள்ள முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் 28 பேருக்கும் உண்டு.

மாகாண சபைகள் ஊடாக அரச சேவைகள் பல முன்னெடுக்கப்படுகின்றன. ஒரு சில மாகாணங்களில் குறைபாடுகள் காணப்படுகின்றன. அவை அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு காணப்படுகிறது. குறைபாடுகள் திருத்திக்கொள்ள முடியும். ஆகவே மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் கவனம் செலுத்த வேண்டும்.

மாகாண சபை முறைமை இரத்து செய்யப்பட வேண்டும் என அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிடும் கருத்து அவரது தனிப்பட்ட அபிப்ராயமாக காணப்படுகிறது.

13 ஆவது திருத்தத்தை நீக்கவும், மாகாண சபை முறைமை இல்லாதொழிக்கவும் குறிப்பிடும் கருத்துக்கள் தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். மாகாண சபை முறைமை நீக்கத்திற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.