அரசியல் யாப்பின் 20 ஆவது திருத்த சட்டமூலம் இன்று (22) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

நீதியமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான மொஹம்மத் அலி சப்ரி இதனை சமர்ப்பித்தார்.

இதன்போது எதிர் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் பதாதைகளையும் சபையில் ஏந்தி நின்று எதிர்ப்பு கோஷம் எழுப்பினர். 

சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டு 7 நாட்களுக்குள் எந்தவொரு பிரஜையும் அதற்கு எதிராக நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்யலாம். அவ்வாறு மனுவொன்று தொடுக்கப்படாத பட்சத்தில், மக்களவையில் 7 நாட்களின் பின்னர் 20 ஆவது திருத்தத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பமாகும்.

இரண்டாவது வாசிப்பின் மீதான விவாதத்தின் முடிவில் திருத்தச் சட்டமூல பிரேரணை வாக்கெடுப்பிற்கு விடப்படும். இதன் போது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பிரேரணை அங்கீகரிக்கப்பட வேண்டும். அதன் பின்னர் குழு நிலை விவாதத்தில் பிரேரணையின் சகல ஷரத்துக்களும் பரிசீலிக்கப்படும். இந்தச் சமயத்தில் திருத்தங்களை பிரேரிக்கலாம். பின்னர் மூன்றாம் வாசிப்பின் மீதான விவாதத்தை அடுத்து பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெறும்.

அரசியல் யாப்பின் மீதான 20 ஆவது திருத்தத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்தும் பரிசீலிப்பதற்காக பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய குழுவொன்று நியமிக்கப்பட்டது. இதற்கு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.






கருத்துரையிடுக

Blogger இயக்குவது.