சவுதாம்ப்டனில் இன்று (06) நடைபெற்ற இரண்டாவது டி 20 போட்டியில் அவுஸ்திரேலிய அணியை 06 விக்கட்டுகளால் வீழ்த்தி இங்கிலாந்து அணி தொடரை 2-0 என்ற கணக்கில் தமதாக்கிக் கொண்டது. 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை வெற்றிகரமாக நடத்திக் கொண்டு இருக்கிறது. அரங்கில் இரசிகர்களை அனுமதிக்காமல் கொரோனா தடுப்பு உயிர் மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி ஒவ்வொரு போட்டிகளும் நடத்தப்படுகிறது.

அதன்படி, இங்கிலாந்து-அவுஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டி-20 போட்டி சவுதாம்ப்டனில் நடைபெற்றது. 

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆஸி. முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய ஆஸி. அணி ஆரம்பம் முதலே தடுமாறத் தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பின்ச் மாத்திரம் ஓரளவு பொறுப்புடன் ஆடி 40 ஓட்டங்கள் எடுத்தார். ஸ்டொய்னிஸ் அதிரடியாக ஆடி 35 ஓட்டங்களையும் மெக்ஸ்வெல் 26 ஓட்டங்களையும் குவித்து ஆட்டமிழந்தனர். மற்ற ஆட்டக்காரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.



இதனால் அவுஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 157 ஓட்டங்கள் எடுத்தது.

இங்கிலாந்து அணி சார்பில் கிரிஸ் ஜோர்தன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


இதையடுத்து 158 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 54 பந்துகளில் 77 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். டேவிட் மெலன் தனது பங்குக்கு 42 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். இறுதியாக களமிறங்கிய மொயின் அலி தமது அணியை 6 பந்துகளில் 13 ஓட்டங்களை அதிரடியாக அடித்தாடி வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.  


இறுதியில், இங்கிலாந்து அணி 18.5 ஒவரில் 4 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.  

இதன்மூலம் அந்த அணி 2-0 என தொடரை தம் வசமாக்கிக் கொண்டது. 

போட்டியின் சிறப்பாட்டக்காரராக இங்கிலாந்து அணியின் விக்கட் காப்பாளர் ஜோஸ் பட்லர் தெரிவானார்.






கருத்துரையிடுக

Blogger இயக்குவது.