மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் மாவனெல்லை நீதவான் நீதிமன்றில் அபராதம் செலுத்திய வியாபாரி ஒருவர் மீண்டும் மதுபோதையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 16ஆம் திகதி முற்பகல் 11.30 மணியளவில் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்திவிட்டு நீதிமன்ற வளாகத்தில் இருந்து சென்ற நபர் மீண்டும் மதுபானம் அருந்திவிட்டு போதையில் வாகனம் செலுத்திய நிலையில் அன்றையதினம் பிற்பகல் 2 மணியளவில் மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மாவனெல்ல பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர்.

அபராதம் செலுத்திய குறித்த வியாபாரி , பிறிதொரு நபர் மற்றும் பெண்ணுடன் உணவகமொன்றுக்கு சென்று மதுபானம் அருந்திவிட்டு வாகனத்தை செலுத்தியுள்ளார்.

இதனையடுத்து,  குறித்த நபர் உத்துவன்கந்த பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

முறையற்ற விதத்தில் வாகனம் செலுத்துவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, வாகனத்தை நிறுத்த முயற்சிக்கப்பட்ட நிலையில், வாகனத்தை நிறுத்தாது, பொலிஸாரை மோதும் வகையில் குறித்த நபர் சென்றுள்ளார். 

பின்னர் வீதித் தடைகளை ஏற்படுத்தி வாகனத்தை நிறுத்தி குறித்த நபர் மற்றும் ஏனைய இருவரும் கைதுசெய்யப்பட்ட நிலையில், பின்னர் பெண் மாத்திரம் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tamil Mirror 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.