(நா.தனுஜா)

சமூக வலைத்தள செயற்பாட்டாளர் ரம்ஸி ரஸீக்கிற்கு நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தும் உடனடியாக நீக்கிக்கொள்ளப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியிருக்கின்றது.

ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தரும் சமூகவலைத்தள செயற்பாட்டாளருமான ரம்ஸி ரஸீக், அவரது பேஸ்புக் பக்கத்தில் செய்த பதிவொன்றுக்காக கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். நீரிழிவு, மூட்டுவாதம் உள்ளிட்ட சில நோய்நிலைமைகளால் பாதிக்கப்பட்ட அவர் சுமார் 161 நாட்கள் வரையில் விசாரணைகள் எதுவுமின்றி தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை கொழும்பு மேல்நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்கியிருக்கிறது.

ரம்ஸி ரஸீக் விசாரணைகளின்றித் தடுத்துவைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில், அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை தொடர்ச்சியாக வலியுறுத்திவந்தது. தற்போது அவருக்கு பிணை வழங்கப்பட்டிருக்கும் நிலையில், இதுபற்றி சர்வதேச மன்னிப்புச்சபை கூறியிருப்பதாவது:

ரம்ஸி ரஸீக்கிற்கு கொழும்பு மேல்நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டிருக்கிறது. மிகவும் மோசமான உடல்நிலையுடன் சுமார் 5 மாதகாலத்தை சிறையில் கழித்த பின்னர் மீண்டும் தனது குடும்பத்தாருடன் இணையக்கூடிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கின்றது. கருத்துச்சுதந்திரத்திற்கான தனது உரிமையைப் பயன்படுத்தியமைக்காக இவ்வாறு அவர் நீதித்துறையின் துன்புறுத்தலுக்கு ஆளாயிருக்கக்கூடாது. உண்மையில் இதற்காக அவர் ஒருநாளைக்கூட சிறைச்சாலையில் கழித்திருக்கக்கூடாது.

இந்நிலையில் அவருக்கு எதிராக ஏதேனும் வழக்குகள் நிலுவையில் இருப்பின் அவையனைத்தும் நீக்கப்பட வேண்டும் என்று உரிய அரச கட்டமைப்புக்களிடம் வலியுறுத்துகின்றோம். அதேவேளை அமைதியான முறையில் தமது கருத்துக்களை வெளியிடுகின்ற செயற்பாட்டாளர்களை அச்சுறுத்துவதற்கும் அவர்கள்மீது வன்முறையைப் பிரயோகிப்பதற்கும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசன சட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.