(பாறுக் ஷிஹான், எம்.சி. அன்சார்)

எமது அரசியல் செயற்பாட்டுக்கு, அரசாங்கம் முட்டுக்கட்டை போட்டுக்கொண்டிருப்பதால், வடக்கு, கிழக்கில் நாளை (28) முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு, அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அம்பாறை - சம்மாந்துறை பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் நினைவுப் பேருரையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், “அரசாங்கமானது, எமது அரசியல் எதிர்ப்பை அடக்குவதற்காக, பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறான தடைகள், முட்டுக்கட்டைகளை நீக்குவதற்காகவே, வடக்கு, கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்குக் கோரப்பட்டுள்ளது. அதனால், முழுமையாக ஹர்த்தாலை அனுஷ்டிப்பதற்கு, அனைவரும் ஆதரவு வழங்க வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கின்றேன்”என்றார்.

“கடந்த காலங்களில், அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தில் குறைகள் இருந்தமையை நாம் அறிந்து, அதனை நிவர்த்தி செய்வதற்கும் தயாராக இருந்தோம். ஆனால், இச்சட்டத்தை முழுமையாக இல்லாமல் செய்வதென்பது, பழைய நிலைக்குச் செல்வதற்குச் சமம். அதாவது, 18ஆவது திருத்தத்துக்கு மீண்டும் செல்வதென்பது, ஜனநாயக விரோதச் செயற்பாடாகும். அதனால் தான், புதிய 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை எதிர்க்கவுள்ளோம்” என, அவர் மேலும் கூறினார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.