(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் காரணமாகாது. இது போன்ற சம்பவங்களுக்கு அரசியலமைப்பு ஒருபோதும் காரணமாகாது. பாதுகாப்புத்துறை முறையாக செயற்படாவிட்டால் இவ்வாறான பாதிப்புக்களை ஏற்படுவதைத் தடுக்க முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் தெரிவித்தார்.

19 ஆவது திருத்தத்தின் காரணமாகவே ஐக்கிய தேசிய கட்சி பிளவடைந்ததாகவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் காரணமாக ஐக்கிய தேசிய கட்சி பிளவுபடவில்லை. அது அரசியல் ரீதியான காரணங்களினாலாகும். அதே போன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்றமைக்கும் 19 காரணமாகாது. பாதுகாப்பு அமைச்சராகக் காணப்பட்ட முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினுடைய கவனயீனமே உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல்களுக்கு காரணமாகும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சென்று சாட்யமளிக்கும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளினுடைய சாட்களின் அடிப்படையில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறுப்பு கூற வேண்டியவர் என்பது தெளிவாகிறது. 19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னரும் நாட்டில் குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளன. அத்தோடு கடந்த அரசாங்கத்தில் தேசிய பாதுகாப்பு சபை கூடும் போது அவற்றுக்கு அப்போதைய பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவில் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக  சில்வா சாட்சியமளிக்கும் போது சஹரானை கைது செய்வதற்காக புதுக்கடை நீதிமன்றத்தில் பிடியாணை பெற்றுக் கொண்டு அதற்கான நடவடிக்கை எடுத்தாகக் கூறினார். இதன் போது அவர் முன்னாள் ஜனாதிபதியையும் பாதுகாப்பு செயலாளரையும் கொலை செய்வதற்கு முயற்சித்ததாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கமைய சுமார் 8 மாதங்கள் சிறையிலடைக்கப்பட்டார். எனவே குண்டு தாக்குதல்களுக்கு 19 காரணமாகாது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.