நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரேமலால் ஜயசேகர, சட்டப்படி பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது என சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.


2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில், ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர் ஒருவரை இரத்தினபுரி மாவட்டத்தின் கஹவத்த பகுதியில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டில், பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் கடந்த ஜுலை மாதம் 31ஆம் திகதி, மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த 2010 - 2015 காலப்பகுதியில், பிரேமலால் ஜயசேகர - பிரதியமைச்சராகப் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பின்னணியில் கடந்த பொதுத் தேர்தலிலே சிறைச்சாலையில் இருந்தவாறு, இரத்தினபுரி மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சி சார்பாகப் போட்டியிட்ட பிரேமலால் ஜயசேகர, 1,04,237 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

சிறையில் இருந்தே பொதுத்தேர்தலில் வென்ற மரண தண்டனை கைதிக்கு பாராளுமன்ற உறுப்பினராக சட்டப்படி செயற்பட முடியாது என, சட்டமா அதிபர் தற்போது அறிவித்துள்ளார்.

முன்னதாக - சிறைச்சாலையில் உள்ள பிரேமலால் ஜயசேகர, தன்னை நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொள்வதற்கு அனுமதிக்குமாறு சிறைச்சாலைத் திணைக்களத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்கமைய நீதியமைச்சிடம் சிறைச்சாலைத் திணைக்களம் அனுமதி கோரியிருந்தது.

இதனையடுத்து, பிரேமலால் ஜயசேகர - பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியுமா என, சட்டமா அதிபரிடம் நீதியமைச்சு ஆலோசனை கேட்டிருந்தது.

அதற்கு அமைவாகவே, பிரேமலால் ஜயசேகர சட்டப்படி பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது என சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க பிரேமலால் ஜயசேகரவை பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு, கடந்த 27ஆம் திகதி பாராளுமன்ற அமர்வின் போது, சிறைச்சாலை திணைக்களத்துக்கு சபாநாயகர் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் "மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியொருவர் அரசியலமைப்பின் படி, பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள முடியாது" என, சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

"மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியொருவர் மேன்முறையீட்டில் பிணை பெற்றுக்கொள்ளக் கூடிய வகையிலான சட்ட ஏற்பாடுகள் எவையும் இல்லை.

குற்றவியல் சட்டத்தின் 333(4)ஆம் பிரிவின்படி, மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் மேன்முறையீடு செய்தமையினால் அவரின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டாலும் கூட, அவர் குற்றவாளி என்பதில் மாற்றம் ஏற்படாது.

அரசியலமைப்பின் 91(1)(அ) பிரிவின் பிரகாரம், அரசியலமைப்பின் 89ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் தகுதியிழப்புக்கு நபரொருவர் உட்பட்டிருந்தால், அவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படவோ, பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளவோ, நாடாளுமன்றில் தனது வாக்கைப் பயன்படுத்துவதற்கோ தகுதியுடையவராக இருக்க மாட்டார்.

அதற்கமைய நபரொருவர் மரண தண்டனைக்குட்பட்டிருந்தால், அவர் வாக்களிக்கும் உரிமையை இழப்பார் என அரசியலமைப்பின் 89ஆம் பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அரசியலமைப்பின் 89ஆம் பிரிவு மற்றும் 91(1)(அ) பிரிவின் பிரகாரம் பிரேமலால் ஜயசேகர என்பவர் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்கோ, நாடாளுமன்றில் தனது வாக்கை பயன்படுத்துவதற்கோ முடியாது என, கடந்த 19ஆம் திகதி - பாராளுமன்ற செயலாளர், சிறைச்சாலைகள் ஆணையாளர் மற்றும் நீதியமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார்" எனவும், நிஷாரா ஜயரட்ன ´ கூறியுள்ளார்.

இருந்த போதும் பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலுள்ள - பாராளுமன்ற உறுப்பினர்களின் விவரத் திரட்டுப் பக்கத்தில், பிரேமலால் ஜயசேகரவின் தகவல்கள் பதிவேற்றப்பட்டுள்ளதோடு, அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் இருவர், சிறைக்குள் இருந்தவாறே வெற்றிபெற்றுள்ளனர்.

அவர்களில் ஒருவர் மேற்படி மரண தண்டனைக் குற்றவாளி பிரேமலால் ஜயசேகர. மற்றையவர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஆவார்.

எவ்வாறாயினும் சிவநேசத்துரை சந்திரக்காந்த், கொலை வழக்கு ஒன்றில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமையினால், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, தற்போதைய நாடாளுமன்றின் முதல் அமர்வில் அவர் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்.

(பிபிசி)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.