( எம்.எப்.எம்.பஸீர்)

இஸ்லாமிய அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பில்  பொலிஸார் ஊடாக எந்தவொரு வெளிப்படையான விசாரணைகளையும் முன்னெடுக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  தனக்கு ஆலோசனை வழங்கியிருந்ததாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர  தெரிவித்தார்.

 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன்னிலையில்  சாட்சியமளிக்கும் போதே அவர் நேற்று ( 23)இதனைத் தெரிவித்தார்.
தான் இதுவரை எவரிடமும் கூறாமல் மனதுக்குள்ளேயே பூட்டி வைத்துள்ள பல விடயங்கள் தொடர்பில் அடுத்து வரும் நாட்களில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் தகவல்களை வெளிப்படுத்த எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக் குழுக்கள் சட்டத்தின் (393 ஆம் அதிகாரம்) 2 ஆம் அத்தியாயத்தின் கீழ் கடந்த 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக் குழுவில் இடம்பெற்று வருகின்றது.

ஆணைக் குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி ஜனக் டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற நீதிபதிகளான நிஹால் சுனில் ராஜபக்ஷ,  அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில் குறித்த சாட்சிப் பதிவுகள் இடம்பெற்று வருகின்றன.

 இதன்போதே நேற்று (23) இரண்டாவது நாளாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜினசேனவின் நெறிப்படுத்தலிலும்,  ஆணைக் குழுவின் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தும் சாட்சியமளிக்கும் போதே முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மேற்படி விடயங்களை வெளிப்படுத்தினார்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் 2 ஆம் நாள் சாட்சிப் பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டபோது, ' நீங்கள் பொலிஸ் மா அதிபராக இருந்த போது, ஜனாதிபதியின் ஆலோசனையைப் பெறாமல் பிரதமரின் ஆலோசனை பிரகாரம் செயற்பட்டீரா?' என வினவப்பட்டது.

 ' இல்லை. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அப்படி நடக்கவில்லை.  எனினும் அரசியல் ரீதியாக கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம்  ஏற்பட்ட 52 நாள் அரசாங்க காலப்பகுதியின் பின்னர் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான சமனிலை குலைந்திருந்தது. இதனால் அவ்விருவருடனும் சமாந்திரமக செயற்பட எனக்கு பாரிய சிரமமாக இருந்தது.
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் இடமற்றங்கள் தொடர்பில் பொலிஸ் ஆணைக் குழு ஊடாகவே முன்னெடுக்க வேண்டி இருந்தது. எனினும் பொலிஸ் ஆணைக் குழுவின் பரிந்துரைப் படி வழங்கப்பட்ட சில இடமாற்றங்களைக் கூட நிறுத்த வேண்டி ஏற்பட்டது.' என  பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.

 தொடர்ந்தும் சாட்சியம் அளித்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் சாட்சியத்தின் சுருக்கம் வருமாறு:

 ஆணைக் குழு:  ஒரே விடயம் தொடர்பில், ஜனாதிபதியும் பிரதமரும் வெவ்வேறு ஆலோசனைகளை  வழங்கிய சந்தர்ப்பம் உள்ளனவா?
பூஜித்: அவ்வாறான சந்தர்ப்பங்களில் நான் ஜனாதிபதி கூறிய ஆலோசனைகளையே பின்பற்றினேன்.

ஆணைக் குழு: 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஊடாக சுயாதீன பொலிஸ் ஆணைக் குழு ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையில், வெளி நபர்களின் அழுத்தம் இருந்தது என்றா நீர் கூறுகின்றீர்?

பூஜித்: 2018 முதல் காலாண்டுப் பகுதியிலிருந்தே அழுத்தங்கள் வந்தன. சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், வலயங்களுக்கு பொறுப்பான அத்தியட்சர்கள் போன்ற பதவிகளுக்கான இடமாற்றங்களை வழங்கும் போது, பொலிஸ் ஆணைக் குழுவின் பரிந்துரைகளை அமுல் செய்ய முடியாமல் போனது.  அவை தடுக்கப்பட்டன.

ஆணைக் குழு: யார் தடுத்தார்?

பூஜித்:  ஜனாதிபதி தான்.
அதன் பின்னர் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, பாதுகாப்புக் குழு கூட்டம் தொடர்பிலும் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை சாட்சியமாக பதிவு செய்யலானார்.

பூஜித்: 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 23 ஆம் திகதி  பாதுகாப்புக் குழு கூட்டம் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. எனினும் மாலை வரை எனக்கு அது தொடர்பில் அழைப்புக்கள் வரவில்லை. மாலை 4.30 மணியளவில் நான், அப்போதைய பாதுகாப்பு செயலர் கபில வைத்தியரத்னவுக்கு அழைப்பை எடுத்து '  சேர்... இன்று செக்கியூரிட்டி கவுன்சில் உள்ளதா? எனக்கு இதுவரை யாரும் அறிவிக்கவில்லை. ' என கூறினேன்.
 அப்போது கபில வைத்தியரத்ன, ' பூஜித், உங்களிடம் இதனை கூற முடியாமல் நான் இருந்தேன். எனினும் நீங்கள் கேட்டதனால் இதனை கூறுகின்றேன்.  ஜனாதிபதி, உங்களை அழைக்க வேண்டாம் எனக் கூறியுள்ளார்.' எனத்  தெரிவித்தார்.
பாதுகாப்புக் குழுக் கூட்டத்துக்கு வர வேண்டாம் என்றதும் நான் பெரிதும் அசௌகரியத்துக்கு முகம் கொடுக்க வேண்டியதாயிற்று.  ஏனெனில் பாதுகாப்பு குழு கூட்டத்தில் கலந்துரையாடப்படும் எந்த விடயத்தையும் என்னால் அறிந்துகொள்ள சந்தர்ப்பம் இருக்கவில்லை. பாதுகாப்பு குழுவில் இருந்தும் எந்த எழுத்து மூல அரிவுறுத்தல்களும் கிடைக்கவுமில்லை. எனக்கு பின்னர், பொலிஸ் திணைக்களத்தில் உள்ள சிரேஷ்ட அதிகாரிகளை அழைக்காமல், வேறு அதிகாரிகள் பாதுகாப்பு குழு கூட்டங்களுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
ஆணைக் குழு; உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் போன்ற பாரிய அழிவின் ஆரம்பம் அதுவ?

பூஜித்: இல்லை. அப்படி கூற முடியாது.  2012,2013 போன்ற ஆண்டுகளில் இருந்தே, சர்வதேச மட்டத்தில் தோற்றம் பெற்ற அடிப்படைவாத நடவடிக்கைகள் ஊடாக இந் நாட்டில் ஏற்பட்ட தாக்கங்கள் தொடர்பில்  நடவடிக்கை எடுக்காமையால்,  அனைத்து செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டிருந்தன. எனினும் மேற்குறிப்பிட்ட விடயம், அதாவது பாதுகாப்பு குழு கூட்டத்துக்கு அழைக்கப்படாமை, எனக்கு தகவல் அறிந்து கொள்ள தடையாக இருந்ததுடன் அதனை மையப்படுத்திய தீர்மானங்களை எடுக்க தடங்கலாக இருந்தது.

ஆணைக் குழு: ஜயசுந்தர, உங்களை பாதுகாப்பு குழு கூட்டத்துக்கு அழைக்காமைக்கான காரணம் என்ன? நீங்கள் இதுவரை பிரசித்தமாக கூறாத விடயங்கள் உள்ளனவா கூறுவதற்கு?

பூஜித் : பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வாவின் இடமாற்றம் தன் முக்கிய காரணம்.  இதனைவிட ஆரம்பம் முதல் நிலவிய தவறான புரிதல்கள்  சிலரின் தவறான தகவல்களை மையப்படுத்திய தவறான புரிதல்களும் காரணமாகின.
சி.ஐ.டி.யில் நிசாந்த சில்வாவின் தலைமையில் பல விசாரணைகள் இடம்பெற்றன. அதில், முன்னாள் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன தொடர்புபட்ட விடயம் ஒன்றும் அடங்கும்.  அந்த விடயம் தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.  நிசாந்த சில்வா, இவர்களை பழிவாங்குவதாக இவர்கள் அக்கூட்டத்தில் கூறினர். அப்போது, நிஷாந்த சில்வாவை  அகற்றுங்கள் என ஜனாதிபஸ்ரீபதி மைத்திரிபால சிறிசேன நேரடியாகவே கூறினார்.
எனினும் அதனை தொடர்ந்து ஜனாதிபதி வெளிநாடொன்றுக்கு சென்றிருந்தார். செல்லும் போது, பாதுகாப்பு செயலரிடம், எப்படியாவது நிஷாந்தவை அகற்றுமாறு கூறியிருந்தார். பாதுகாப்பு செயலர் என்னிடம் கூறினார்.  என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பின்னர் நான் பாதுகாப்பு குழுக் கூட்ட விடயங்களை சுட்டிக்காட்டி,  பொலிஸ் ஆணைக் குழுவுக்கும் அறிவித்து,  என்னால் ஒன்றுபட முடியாவிட்டாலும் அவ்வேலையை செய்ய வேண்டி ஏற்பட்டது.

இரு நாட்களில் ஜனாதிபதி மீள நாடு திரும்பினார். நான் விமான நிலைய பகுதி பாதுகாப்பு விடயங்களை மேற்பார்வை செய்ய சென்றிருந்தேன். அப்போது ஜனாதிபதியிடமிருந்து அழைப்பொன்று வந்தது. எங்கு இருக்கின்றீர் என வினவினார். நான் விமான நிலைய வளாகத்தில் இருப்பதாக கூறினேன். அப்போது ஜனாதிபதி, நிஷாந்த சில்வாவை யார் இடமாற்றம் செய்தது? என வினவினார்.

சேர்.. நான் தான் இடமாற்றம் வழங்கினேன் என கூறினேன். அப்போது, மீண்டும், யார் சொல்லி இடமாற்றம் செய்தீர் என என்னிடம் ஜனாதிபதி கேள்வி எழுப்பினார். சேர்... நீங்கள் தான் பல தடவைகள் இடமாற்றம் செய்ய சொன்னீர்கள். பாதுகாப்பு செயலரும் அதனையே கூறினார். அதனால் செய்தேன் என அவருக்கு பதிலளித்தேன்.  நான் அப்படி கூறவில்லை. நான் செயலாளரிடம் கேட்டுக்கொள்கின்றேன் எனக் கூறி அழைப்பை துண்டித்தார்.

ஆணைக் குழு: எதற்காக ஜனாதிபதி அவரின் முதல் உத்தரவிலிருந்து பின்வாங்கினார் என தெரியுமா?

பூஜித்:  நான் நினைக்கின்றேன் அவருக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் வந்திருக்கும். சஜித் பிரேமதாஸ, மஹிந்த அமரவீர போன்றோர் ஜனாதிபதிக்கு அழைத்து கேள்வி எழுப்பியிருந்தனர். ஜனாதிபதி பாரிய அழுத்ததுக்கு மத்தியில் இருந்தார்.

ஆணைக் குழு: அடிப்படைவாதம் தொடர்பிலான நடவடிக்கைகள் தொடர்பில் உங்களுக்கு ஏதேனும் ஆலோசனைகள் கிடைத்தனவா?

 பூஜித்:  உண்மையில் இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரே விசாரணைகளை முன்னெடுத்தனர். அது தொடர்பில் அதன் பணிப்பாளர் அப்போதைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நாலக டி சில்வாவை நான் ஜனாதிபதியிடம் அழைத்து சென்று அறிமுகம் செய்திருந்தேன்.  அதன் பின்னர் அவர் என்னுடன் ஜனாதியை சந்திக்க சென்று, அதுவரை உலகம் மற்றும் உள் நாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் ஆதிக்கம் தொடர்பில் நீண்ட விளக்கமான விளக்கங்களை முன்வைத்தார்.

அவற்றை அவதானித்துவிட்டு ஜனாதிபதி இறுதியாக, இது மிகவும் அவதானமான வேலை.  மிகக் கவனமாக செய்ய வேண்டும்.  சிரியாவில் மட்டுமே நடந்துள்ளது. தர்போதுவரை இங்கு உபதேசங்கள் மட்டுமே நடக்கின்றன. அர்சாங்கத்தில் முஸ்லிம் அமைச்சர்களும் இருக்கின்றார்கள். அவர்கள் ஊடாக அரசாங்கத்துக்கு அழுத்தம் ஏற்படலாம். அதனால் மிகக் கவனமாக செயற்படுங்கள் என கூறினார்.

பின்னர் பாதுகாப்பு குழு கூட்டம் நடை பெற்றது. அதில் இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் விஷேடமாக ஏதும் பேசப்படவில்லை.  அப்போது ஜனாதிபதி, இது தொடர்பில் பொலிஸார் ஊடாக திறந்த வெளிப்படை விசாரணைகளை செய்ய வேண்டாம் என கூறினார். அரச  உளவுச் சேவையின் நிலந்த  இது தொடர்பில் மேற்பார்வை செய்வது போதுமானது என ஜனாதிபதி கூறினார்.

 நேற்று ( 23) முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் சாட்சியத்தை இறுதி 30 நிமிடங்கள் வரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரில் ஆஜராகி அவதானித்துக்கொண்டிருந்தார்.

இந் நிலையில் பூஜித் ஜயசுந்தரவின் மேலதிக சாட்சியங்கள் இன்று 24 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.