கொவிட்-19 வைரஸ் பரவியுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருணாகலை மற்றும் கேகாலை மாவட்டங்களிலிருந்து ஏனைய மாவட்டங்களுக்கு மிகவும் விரைவாக வைரஸ் பரவக்கூடிய அபாயநிலை தோன்றியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் இந்த ஐந்து மாவட்டங்கள் குறித்து உடனடியாக தீர்க்கமான முடிவொன்றை எடுக்க வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொவிட்-19 நெருக்கடி தொடர்பில் நேற்று சனிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கண்டறியப்படும் அனைத்து நோயாளர்களும் மினுவாங்கொடை தொழிற்சாலை ஊழியர்களுடன் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை பேணியவர்கள்தான் என தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இங்கு வைரஸ் எவ்வாறு பரவியதென தெரிவிக்க வேண்டும். எவ்வாறு வைரஸ் பரவியதென கண்டறியப்படாதுள்ளது.

சமூகத் தொற்று இல்லையென தொற்று நோய் தடுப்பு பிரவு கூறினாலும், சமூகத் தொற்றுக்கான கட்டத்தை எட்டியுள்ளோம். இன்றோ, நாளையோ அல்லது அடுத்த வாரமோ சமூகத் தொற்று ஏற்படுமென்ற நிலைக்கே நாம் வந்துள்ளோம். சமூகத் தொற்று ஏற்படும் பட்சத்தில் நாம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் தலைக்கீழாக மாறிவிடும்.

கொவிட்-19 வைரஸ் பரவியுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கேகாலை, குருணாகலை ஆகிய 5 மாவட்டங்கள் அபாயம் மிகுந்த மாவட்டங்களாக மாறியுள்ளன. இந்த மாவட்டங்களிலிருந்து ஏனைய மாவட்டங்களுக்கு துரிதமாக பரவக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால் அபாயம் மிகுந்த இந்த 5 மாவட்டங்கள் தொடர்பில் எடுக்க வேண்டிய சிறந்த தீர்மானத்தையாவது அரசாங்கம் உடனடியாக எடுக்க வேண்டும். இந்த விடயத்தை நாம் ஜனாதிபதி செயலணிக்கும் தெளிவுப்படுத்தியுள்ளோம் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.