அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.

பரிந்துரைகள் அடங்கிய இறுதி அறிக்கை நவம்பர் மாதம் 9 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் வழங்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

2015 ஜனவரி 8 ஆம் திகதி முதல் 2019 நவம்பர் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரச, அரச மற்றும் தனியார் கூட்டு நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராய்ந்து, தகவல்களை திரட்டுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

இந்த ஆணைக்குழுவிற்கு இதுவரை 1842 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இவற்றில் 112 முறைப்பாடுகளின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

872 முறைபாடுகள் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் அமைச்சரவைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

2020 ஜனவரி 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன செயற்படுகின்றார்.

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் 9 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.