(கஹட்டோவிட்ட ரிஹ்மி)

திவுலபிடிய பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்படும் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாகவும் தனிமைப்படுத்தலில் இருந்தவர்களின் (14 நாட்கள்) கால எல்லை முழுமையடைந்து ஆரோக்கியமான பெறுபேறுகள் கிடைத்து வருவதாகவும் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருட்கள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்தவின் தலைமையில் நடைபெற்ற, திவுலபிடிய தேர்தல் தொகுதியின் கொவிட் - 19 தொடர்பான குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

குறித்த குழுக்கூட்டம் இன்றைய தினம் (01) திவுலபிடிய பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. மேலும் தற்போது தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் இருக்கும் தொற்றாளர்கள் மற்றும் அவர்களுக்கான நலன்புரி நடவடிக்கைள், ஏற்கனவே தொற்றுக்குள்ளானவர்களின் தற்போதைய நிலைமைகள், தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் திவுலபிடிய, ஹொரகஸ்முல்ல மாவட்ட வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

 அரசினால் வழங்கப்படும் ரூபா 5000 கொடுப்பனவு திவுலபிடிய பிரதேசத்திலுள்ள 38,000 குடும்பங்களுக்கும் அவசரமாக வழங்கி வைக்குமாறு இராஜாங்க அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.இது தவிர, தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் இருக்கும் குடும்பங்களுக்கு அரசினால் வழங்கப்படும் ரூபா 10,000 பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை வழங்குவது தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டது.

மேலும் கூட்டுறவு சங்கத்தின் மூலம் அத்தியாவசிய பொருட்களை பகிர்ந்தளிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், கூட்டுறவு சங்க தலைவர்கள் கூட்டுறவு வர்த்தகர்களுடன் அதற்கான நடவடிக்கைகளை செய்வதற்கு இணங்கினர்.

ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமுலாக்கப்பட்டுள்ள நிலையில் எக்காரணம் கொண்டும் அத்தியாவசிய சேவைகளை தவிர்த்து வேறு எதற்காகவும் ஊரடங்கு அனுமதி பத்திரங்களை வழங்கக்கூடாது என்பதுடன் சுகாதார அதிகாரிகளின் அனுமதியுடன் ஊரடங்கு நேரத்தில் அனுமதிகளை வழங்குவதாக கூட்டத்தில் பங்கெடுத்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் உறுதியளித்தனர்.

திவுலபிடிய தொகுதியிலிருக்கும் கிராம சேவகர் பிரிவுகளுக்கு உட்பட்ட அரச ஊழியர்களின் பங்களிப்புடன் சங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கும் கிராம சேவகர் பிரிவுகளுக்குட்பட்ட தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தினை குறித்த சங்கத்திற்கு வழங்குவதற்கும் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது.

மேற்படி கலந்துரையாடலில் திவுலபிடிய பிரதேச சபை உறுப்பினர்கள், திவுலபிடிய பிரதேச செயலாளர், உப பிரதேச செயலாளர், திவுலபிடிய மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி, சுகாதார ஊழியர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள், கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.  








கருத்துரையிடுக

Blogger இயக்குவது.