(க.பிரசன்னா)

கொவிட் 19 நோய்க்கான உள்ளுர் ஆயர்வேத மருந்து உற்பத்தியானது, தம்மிக்க பண்டார என்ற தனிநபரால் தயாரிக்கப்பட்டதாக கூறுவது மோசடியானதென ஆயர்வேத மருத்துவரும் வெண்டோல் லங்கா நிறுவனத்தின் தலைவருமான லெல்வெல ஜி கோடகந்த தெரிவித்துள்ளார்.

ஊடக நிகழ்வொன்றுக்கு மேற்படி கருத்து வெளியிட்டிருந்த ஆயர்வேத மருத்துவரும் தொழில்துறை உரிமையாளருமான லெல்வெல ஜி கோடகந்த, தற்போது மருந்தாக கருதப்படும் குறித்த பாணியில் உள்ளடக்கப்பட்டுள்ள பொருட்கள் விஷமாக மாறக்கூடுமென தெரிவித்துள்ளார்.

தற்போது இம்மருந்தை பயன்படுத்திய அனைவரின் உடலிலும் நச்சுக்கள் பரவியிருக்குமெனவும் அவற்றை உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கையெடுக்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.

ஆயர்வேத மருத்துவத்தின்படி, தேனீக்களின் தேன் ஒருபோதும் சூடாகாதெனவும் ஏனெனில் அது விஷமாக மாறக்கூடுமெனவும் ஜாதிக்காயை பயன்படுத்துவதும் சிக்கலானதெனவும் அதுவும் விஷமாக மாறக்கூடுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த தவறான மருந்துக்கு அமைச்சரும் ஆயுர்வேத ஆணையாளரும் பொறுப்பு என்று குற்றம் சாட்டியுள்ளதுடன் மேலும் இம்முழு செயன்முறையும் ஒரு முழுமையான ஊடக நிகழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 இலிருந்து தங்களைக் காப்பாற்றுவதற்காக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி மற்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உட்பட பல எம்.பி.க்கள் பகிரங்கமாக இந்த மருந்தை அருந்தியிருந்தனர்.

அத்துடன் குறித்த மருந்தை சுகாதார அமைச்சு அங்கீகரிக்கவில்லையெனவும் ஆயுர்வேத திணைக்களத்தால் பதிவு செய்யப்படவில்லையெனவும் ஆயுர்வேத ஆணையாளர் ஏற்கனவே அறிவித்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.