(எம்.மனோசித்ரா)

நாட்டுக்கு எதிராக சர்வதேச சதி முன்னெடுக்கப்படுவது உண்மையானால், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது புலனாய்வுப் பிரிவு பலவீனமடைந்திருந்ததாகக் கூறிய தற்போதைய அரசாங்கம், இன்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் ஆட்சியிலும் புலனாய்வுப் பிரிவு பலவீனமடைந்துள்ளது என்று கூறுகிறதா என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே கேள்வியெழுப்பினார்.

மஹர சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழுவால் சமர்பிக்கப்படும் அறிக்கையை நாட்டு மக்களோ ஐக்கிய மக்கள் சக்தியோ ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என்பதால், சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் ஹஷா விதானகே வலியுறுத்தினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், நாட்டுக்கு எதிராக சர்வதேச சதித்திட்டம் தீட்டப்படுவதாக அமைச்சர் விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் பகிரங்கமாக தெரிவித்ததன் மூலம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் தோல்வியடைந்துள்ளமை மீண்டும் உறுதியாகியுள்ளது.

ஆனால் இவ்வாறான போலியான கதைகளைக் கூறி மக்களை முட்டாள்களாக்க முயற்சிக்க வேண்டாம் என்று அமைச்சர் விமல் வீரவன்சவிடம் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மஹர சிறைச்சாலையில் கைதிகள் மூலம் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான எவ்வித வாய்ப்பும் காணப்படவில்லை. சிறைச்சாலை அதிகாரிகள் மூலமாகவே அங்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

காரணம் சிறைச்சாலைக்குள் கைதிகளை அனுமதிப்பதற்கு முன்னர் அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதன் போது தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டால் மாத்திரமே அவர்கள் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படுகிறார்கள்.

இந்த நடைமுறை சிறைச்சாலை திணைக்களம் மற்றும் சுகாதார அமைச்சின் இணக்கத்துக்கு அமையவே முன்னெடுக்கப்படுகிறது. இவ்வாறான நிலையில் கைதிகள் மூலம் தொற்று பரவுவதற்கான வாய்ப்பு ஏற்படாது.

இவ்வாறான நடைமுறை பின்பற்றப்பட்ட போதிலும், வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து மஹர சிறைக்கு மாற்றப்பட்ட 120 கைதிகளுக்கும், போகம்பரை சிறையிலிருந்து மஹர சிறைக்கு மாற்றப்பட்ட 59 கைதிகளுக்கும் அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறுதான் மஹர சிறைக்குள் கொவிட் தொற்று பரவியது.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராகவே கைதிகள் எதிர்ப்பினை வெளியிட்டனர். மாறாக மாத்திரை உபயோகமோ அல்லது சர்வதேச சதியோ இதற்கு காரணமல்ல. எனினும் சர்வதேச சதி முன்னெடுக்கப்படுவது உண்மையானால், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது புலனாய்வுப் பிரிவு பலவீனமடைந்திருந்ததாகக் கூறிய தற்போதைய அரசாங்கம், இன்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் ஆட்சியிலும் புலனாய்வுப் பிரிவு பலவீனமடைந்துள்ளது என்று கூறுகிறதா?

மஹர சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழு ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நாட்டு மக்களோ நாமோ நம்புவதற்கு தயாராக இல்லை. எனவே சுயாதீன விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கையை சமர்பிக்குமாறு வலியுறுத்துகின்றோம்.

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் சந்தேகநபர்களானாலும் குற்றவாளிகளேயானாலும் அவர்களின் உயிரைப் பறிக்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு கிடையாது என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.