அதிமேதகு மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் கைவிடப்பட்ட அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் விரைவில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு தேசிய பொருளாதாரம் பலப்படுத்தப்படும் என்று கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

அதி மேதகு கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகி ஆட்சிக்கு வந்த பின்னர் அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட அனைத்துத் திட்டங்களின் செயற்பாடுகளும் இன்று தேசிய பொருளாதாரத்திற்குப் பெரும் பங்களிப்பைச் செய்கின்றன என்று அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் முறையாக வேலை செய்யாத காரணத்தால் முன்னைய வீடமைப்பு அமைச்சர் நேற்று நடைபெற்ற  பாராளுமன்ற வீடமைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடு சம்பந்தமான வரவு செலவுத் திட்டத்திற்கு சமூகம் அளிக்கவில்லை என்றும் இதன் மூலம் யார் வெற்றியடையப் போகிறார்கள்? யார் தோல்வியடையப் போகிறார்கள் என்பதும் தெட்டத் தெளிவாகத் தெரிவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான பேலியகொட C City பல் பொருள் அங்காடி நிலையத்தின் வேலைத்தள மேற்பார்வையைக் கள ஆய்வு செய்ய இன்று (03) சென்ற போது மேற்கண்டவாறு உரையாற்றினார்.

அதிமேதகு மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில் இந்த பல் பொருள் அங்காடி நிலையம் ஆரம்பிக்கப்பட்டு அதன் நிர்மாணப் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்திருந்தது. ஆனால் கடந்த நல்லாட்சியின் போது இது கைவிடப்பட்டு எந்தப் பிரயோசனமும் இன்றி அது காடாக வளர அனுமதிக்கப்பட்டிருந்தது.

பல்லாயிரக் கணக்கான ரூபா செலவில் கவனிக்கப்படாமல் விடப்பட்ட பொதுச் சொத்துக்களை மீளப் புனரமைத்து பயன்படுத்துவதை விரைவுபடுத்துவதற்காக கெளரவ பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த கள ஆய்வுப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. 2013 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த பல் பொருள் அங்காடி நிலையத்தில் 350 க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.

இந் நிகழ்வில் பிரதமர் அலுவலகத் தலைமை அலுவலகர் யோஷித்த ராஜபக்‌ஷ மற்றும் அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறீநிமல் பெரேரா, கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளர் கீர்த்தி ரஞ்ஜித் அபேகுணவர்தன, அரச பொறியியல் கூட்டுத்தாபனத் தலைவர் ரத்னசிறி கலுபஹன, உப தலைவர் ஹாகய ஜயதிலக்க உள்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.







கருத்துரையிடுக

Blogger இயக்குவது.