பாறுக் ஷிஹான், எம்.என்.எம்.அப்ராஸ், அஸ்லம் எஸ்.மௌலானா, எஸ்.அஷ்ரப்கான், ஏ.எல்.எம். ஷினாஸ்

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை செய்லான் வீதி தொடக்கம் மாதவன் வீதி வரையாக உள்ள பகுதிகள், இன்று (17) முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கல்முனை நிலவரம் தொடர்பாக விசேட கலந்துரையாடல், கல்முனை மாநகர மேயர் ஏ.எம்.ரக்கிப் தலைமையில், மாநகர செயலகத்தில் நேற்று (16) இரவு நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்தில், இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

கல்முனை பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையில், சுமார் 15க்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, மேற்படி அவசர உயர் மட்டக் கலந்துரையாடல் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில், கல்முனை செய்லான் வீதி தொடக்கம் மாதவன் வீதி வரையான பிரதேசங்கள் இன்று காலை 6 மணி தொடக்கம் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதனையடுத்து, இப்பிரதேசங்களை சேர்ந்த பொதுமக்கள் தமது வீடுகளில் இருந்து வெளியேறுவதற்கோ, இப்பகுதிகளினுள் எவரும் உள்நுழைவதற்கோ அனுமதிக்கப்படவில்லை. இதனால் இப்பிரதேசங்களில் வீதிகள் யாவும் வெறிச்சோடிக் காணப்பட்டன. பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.

தனிமைப்படுத்தப்பட்ட இப்பிரதேசங்களில் கொரோனா வைரஸ்  தொற்றுக்குள்ளானவர்களின் உறவினர்கள் மற்றும் தொடர்புடையவர்களுக்கும் எழுந்தமானமாகவும் பி.சி.ஆர். மற்றும் அன்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதேவேளை, மேற்படி உயர்மட்டக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், கல்முனை பொதுச் சந்தையும் நேற்றைய தினம் முடக்கப்பட்டிருந்தது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.