கொரோனா வைரஸ் தொற்று மற்றும், மகா சங்கத்தினரின் கோரிக்கைகளுக்கு அமையவும் நாட்டில் ஏற்பட்டுள்ள வேறு காரணங்களையும் ஆராய்ந்து பார்த்து, மாகாண சபைத் தேர்தலைப் பிற்போட கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதென, சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் (28) நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டது என, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், கொரோனா வைரஸ் தொற்றின் மத்தியில், புதிய தேர்தல் முறையொன்று உருவாக்கப்படும் வரையும் மகா சங்கத்தினரால் முன்வைக்கப்பட்டுள்ள எதிர்ப்பையும் கவனத்தில் எடுத்தே, இத்தீர்மானத்தை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“மாகாண சபைகளை இரத்துச் செய்ய வேண்டுமென்ற எண்ணம் நாட்டுக்குள் காணப்படுகின்றது. சிலர் மாகாண சபை இருக்க வேண்டுமென கூறுகின்றனர். எனினும், மாகாண சபை தேர்தலை, தற்போது நடத்துவது உசிதமானதல்ல” என்பதே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என்றார்.

கொரோனா வைரஸ் தொற்றால், நாட்டில் பொருளாதாரத்துக்குச் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இதுவே, எமது இந்தத் தீர்மானத்துக்கான காரணம் என்றார். அத்துடன், புதிய தேர்தல் முறைமையின் கீழ், தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்று நாம் காரணங்களை முன்வைத்துள்ளோம். அதேபோல், இந்த அரசாங்கத்துக்குத் தேவையான குழுக்களும் மகா சங்கத்தினரும் தேர்தலை பிற்போடுமாறு அழுத்தம் விடுப்பதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எனவே, மேற்கூறப்பட்ட அனைத்துக் காரணங்கள் குறித்து, கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டமைக்கு அமைவாக, இறுதித் தீர்மானமாக மாகாண சபைத் தேர்தலைக் காலவரையறையின்றிப் பிற்போடத் தீர்மானிக்கப்பட்டது என்றார்.

மாகாண சபைத் தேர்தலை இரத்துச் செய்வது இலகுவான காரியமல்ல. மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாவிட்டாலும் மாகாண சபைகள் செயற்பாட்டிலேயே உள்ளன. மாகாண சபைகள் உருவாகுவதற்குக் காரணமான அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் கீழ், உலகில் சில நாடுகள் அந்தத் திசையை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கின்றன. இலங்கையானது உலகத்துக்குள்ளே உள்ளதே அன்றி, உலகம் இலங்கைக்குள் இல்லை. எனவே, நாம் உலகை மறந்து தீர்மானங்களை எடுக்க முடியாது. எனவே, மாகாண சபையை ஒழிப்பதாகக் கூறி, புதிய யுத்தம் ஒன்றை ஆரம்பிக்கத் தேவையில்லை என்றார்.

அதேபோல், பொதுஜன பெரமுனவில் பின்வரிசையில் உள்ள பலர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை எந்தநாளும் விமர்சிக்கின்றனர்; அவமானப்படுத்துகின்றனர். குற்றம் சுமத்துவதுடன், எமது தேசிய ஒருங்கிணைப்பாளர்களைப் புறக்கணிக்கின்றனர். நாம் இதுதொடர்பிலும் நேற்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சுட்டிக்காட்டினோம். ஆனால் பொதுஜன பெரமுனவில் உள்ள உயர்மட்டத் தலைவர்கள், எப்போதும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை அவமதிக்கும் வகையில் செயற்படுவதில்லை என்றார்.

அவர்கள் அனைவரும் எமது கட்சியை மதிக்கின்றனர். சில மாவட்டங்களில் முதலாம் வாக்குகளால் முதலிடத்துக்கு வரவிருந்து 4ஆம் இடத்துக்கு வந்தவர்களே இவ்வாறு விமர்சனங்களை முன்வைக்கின்றனர். இதனால் எமக்கு ஏமாற்றம் இல்லை. அவர்களுக்குத் தான் ஏமாற்றம் என்றார்.

அத்துடன் இந்த விடயம் குறித்து, ஜனாதிபதி, பிரதமர், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பசில் ராஜபக்‌ஷவின் கவனத்துக்குக் கொண்டு வந்ததுடன், அவர்களும் இதற்குத் தீர்வைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்ததாக, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.