(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைகளில் காணப்படும் தாமதம் காரணமாகவே சிறைச்சாலைகள் நிறைந்து காணப்படுகின்றன. அதனால் நாட்டில் குற்றங்களை குறைக்க முறையான வேலைத்திட்டம் அவசியமாகுமென முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், சிறைச்சாலைகளில் உள்ளவர்கள் மற்றும் சிறைச்சாலைகளில் உள்ளடக்கக் கூடிய தொகை தொடர்பில் கடந்த சில நாட்களாக பாராளுமன்றில் பேசப்பட்டது.

சிறைச்சாலைகயில் காணப்படும் பாரிய நெரிசல்கள் பாரிய பிரச்சினையாகும். சிறைச்சாலைகளில் உள்ள நெரிசல்கள்தான் கைதிகளில் மனதில் விரிசல்களையும் ஏற்படுத்துகிறது. வழக்கு விசாரணைகளில் காணப்படும் தாமதங்கள் காரணமாகவே சிறைச்சாலைகள் நிறைந்துள்ளன. அதற்கு ஒரு முறையான வேலைத்திட்டம் அவசியமாகும்.

நான் பாரியளவில் கைதிகளை விடுவித்திருந்தேன். சிறைச்சாலைகளில் காணப்பட்ட நெரிசல்களை குறைக்கவே இவ்வாறு செய்திருந்தேன். எதிர்காலத்தை அனுபவிக்க வேண்டிய இளைஞர்கள் போதைப் பொருள் குற்றச்சாட்டில் சிறைகளில் அதிகம் உள்ளனனர்.

சிறைச்சாலைகளின் சேவைகள் மறுசீரமைக்கப்பட வேண்டும். சிறைச்சாலைகள் திணைக்களம் வலுப்படுத்தப்பட வேண்டும். குற்றங்கள் அதிகரிப்பது மற்றும் சிறைச்சாலைகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவிப்பின் பிரகாரம் 2005 ஆம் ஆண்டு குற்றங்களின் தலை நகராக கிளாஸ்கோ நகரம் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. சிறைச்சாலைகளிலேயே குற்றவாளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டமையால் காலம் செல்ல செல்ல குற்றங்கள் குறைந்துள்ளன.

ஆகவே, இவ்வாறு அபிவிருத்தி அடைந்துள்ள நாடுகளில் குற்றங்கள் எவ்வாறு குறைந்துள்ளன என்பதை பார்த்து நாம் எமது வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.