திமுகவை ஆறாவது முறையாக ஆட்சியை செலுத்த கட்டளையிட்ட மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்மொழிக்கும் - இனத்துக்கும் - நாட்டுக்கும் காவல் அரணாக உருவாக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆறாவது முறை ஆட்சியைச் செலுத்தக் கட்டளையிட்டுள்ள தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கழகத்திடம் தமிழகத்தை ஒப்படைத்தால் நாடும், நாட்டு மக்களும் நலமாக இருப்பார்கள் என்பதை உணர்ந்து மக்கள் தங்களது மகத்தான ஆதரவைக் கழகக் கூட்டணிக்கு வழங்கியுள்ளார்கள்.

தமிழகத்தில் ஐந்து முறை ஆட்சி செலுத்திய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே, கழக ஆட்சியை மலர வைக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் காலம் முந்திக் கொண்டு விட்டது. அந்தக் கனவை நிறைவேற்றியாக வேண்டும் என்ற துடிப்புடன் ஒவ்வொரு நாளும் செயல்பட்டோம். அந்த உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம்தான் மக்கள் தந்துள்ள இந்த மாபெரும் வெற்றியாகும்.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டுக்கு இயக்க ரீதியாகவும் - ஆட்சி ரீதியாகவும் உழைத்த நமது உழைப்புக்குக் கிடைத்த பாராட்டுப் பத்திரமாக நினைத்து இதனைப் பாதுகாப்பேன். நமது உழைப்புக்குத் தரப்பட்ட அங்கீகாரமாக இதனை நினைக்கிறேன்.

ஜனநாயகப் போர்க்களத்தில் தி.மு.க. கூட்டணி அடைந்த வெற்றியைத் தங்களது வெற்றியைப் போல மதித்தும் நினைத்தும் காலையில் இருந்து என்னைத் தொடர்பு கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் அகில இந்தியத் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்கள், சமயச் சான்றோர்கள், திரையுலக நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் ஆகிய அனைவருக்கும் நன்றி.

தமிழகத்தில் அமையப் போகும் கழக ஆட்சியானது, எத்தகைய கனவுகள் கொண்டதாக தமிழகம் அமைய வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் சேர்ந்து நடத்தப் போகும் ஆட்சியாகும்.” என மு.க. ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

தமிழக சட்டமன்ற தேர்தல் - முக்கிய சாராம்சம்  • மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் முன்னிலை வகிக்கிறது. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல் மநீம சார்பில் முன்னிலையில் உள்ளார்.
  • பாமக 6 தொகுதியிலும், விடுதலை சிறுத்தைக் கட்சி 3 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் இரு தொகுதியிலும் , இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) இரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன.
  • எடப்பாடி தொகுதியில் மொத்தம் 28 சுற்றுகள் வாக்குகள் எண்ணப்பட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 92, 700 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

நன்றி பிபிசி தமிழ் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.