நாட்டை மூடுமாறு கோரி, அரசாங்கத்தின் பத்து பங்காளிக் கட்சிகளின் தலைவர்களால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் கையெழுத்திட்ட மூன்று அமைச்சரவை அமைச்சர்கள், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று தீர்மானித்துள்ளனர் என தமிழ் மிரர் ஊடகம் தெரிவித்துள்ளது.

குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்ட விடயங்கள்:

அரசாங்கத்தின் பத்து பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், கடந்த வியாழக்கிழமை (26) இரவு அமைச்சர் விமல் வீரவன்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஒரு சந்திப்பை நடத்தியதாகவும், பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று முடிவு செய்ததாகவும் தெரியவருகிறது.

நாட்டை மூட வேண்டாம் என்று அமைச்சரவை முடிவு எடுத்த போதிலும், நாட்டை மூடக் கோரி மூன்று அமைச்சர்களின் கையொப்பங்களுடன் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியதன் பின்னணியில் சதி இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் கடந்த வாரம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதேவேளை ஆளும் கட்சியின் உதவி அமைப்பாளராக செயற்படும் ஸ்ரீ லங்கா மகஜன கட்சியின் தலைவர் அசங்க நவரத்ன அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் (26) என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் மிரர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.