ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவம் முழுமையாக வெளியேறுவதற்கு சில தினங்களுக்கு முன் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 10 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டது உண்மைதான் என அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது.

ஆகஸ்ட் 29ஆம் தேதி நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ஒரு மனிதாபிமான சேவை உதவியாளர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் இறந்துள்ளதாக அமெரிக்காவின் மத்திய கமாண்ட் விசாரணை கண்டுபிடித்துள்ளது.

தாக்குதலில் பலியானவர்களில் ஏழு பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. பலியானவர்களில் இரண்டு வயதான குழந்தை சுமையா தான் மிகவும் இளையவர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்காவின் இந்த ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. திடீரென தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றியதால், அப்போது மக்களை மீட்கும் பணிகளும் அதிதீவிரமாக நடந்து கொண்டிருந்தது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய 20 ஆண்டு கால ராணுவ செயல்பாடுகளில், கடைசி நடவடிக்கை அது.

அமெரிக்க உளவுத் துறை, அந்த மனிதாபிமான சேவை உதவியாளரின் காரை எட்டு மணி நேரத்துக்கு மேல் பின் தொடர்ந்ததாகவும், அந்த காருக்கும் இஸ்லாமிக் ஸ்டேட் - கோரோசான் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் கடும்போக்குவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும் அமெரிக்க மத்திய கமாண்டின் ஜெனரல் கென்னெத் மெக்கென்ஸி கூறினார்.

அந்த கார், இஸ்லாமிக் ஸ்டேட் - கோரோசான் கடும்போக்குவாத அமைப்புகளோடு தொடர்புடைய வளாகம் ஒன்றில் காணப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது. மேலும் அக்காரின் நகர்வுகள் அக்கடும்போக்கு அமைப்பு காபூல் விமான நிலையத்தின் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தும் திட்டம் தொடர்பான உளவுத் துறை செய்திகளோடு ஒத்துப்போயின.

அக்காரில் வெடிபொருட்களை நிரப்புவது போன்ற காட்சிகள் ஒரு கண்காணிப்பு ட்ரோன் மூலம் கிடைத்தது, ஆனால் உண்மையில் தண்ணீர் பாட்டில்களே நிரப்பப்பட்டன.

 ஜெனரல் மெகென்ஸி அந்த ட்ரோன் தாக்குதலை ஒரு "சோகமான தவறு" என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த தாக்குதல் தொடர்பான உளவுத் துறை விவகாரங்களில் தாலிபன்கள் ஈடுபடுத்தப்படவில்லை எனவும் கூறினார்.

காபூல் விமான நிலையத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருந்த சமைரி அக்மாதி, தன் வீட்டிலிருந்து காரை வெளியே எடுக்கும் போது, காரின் பாதையில் வைத்து அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதல் நடந்தது.

ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, கார் இரண்டாவது முறை வெடித்தது. அதுவே காரில் வெடிமருந்து இருந்ததற்கான சாட்சி என அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் தொடக்கத்தில் கூறப்பட்டது. ஆனால் விசாரணையில் இரண்டாவது வெடிப்பு ஏற்பட்டது, சமைரியின் வீட்டில் காரின் பாதையில் இருந்த ப்ரொபேன் டேங்க் வெடித்ததால் ஏற்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட அஹ்மத் நாசர் என்பவர் அமெரிக்க படைகளில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றியவர். கொல்லப்பட்ட மற்றவர்கள் இதற்கு முன் சர்வதேச அமைப்புகளிடம் பணியாற்றியவர்கள். அவர்கள் அமெரிக்காவில் நுழையத் தேவையான விசாக்கள் வைத்திருந்தனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை தாலிபன்கள் கைப்பற்றிய பிறகு, பலரும் அந்நாட்டை விட்டு வெளியேற காபூல் விமான நிலையத்தில் கூடினர்.

அமெரிக்கா உட்பட பல நாடுகளும் மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது, கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி இஸ்லாமிக் ஸ்டேட் - கோரோசான் என்கிற கடும்போக்குவாத அமைப்பு தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது. அதில் 170 பொதுமக்கள் மற்றும் 13 அமெரிக்க படையினர் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடி கொடுக்கத்தான் அமெரிக்கா ட்ரோன் தாக்குதல் நடத்தியது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியபடியே ஆகஸ்ட் 31ஆம் தேதி ஒட்டுமொத்த அமெரிக்க ராணுவமும் ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக வெளியேறியது.

(பிபிசி தமிழ்)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.