முறையற்ற விதத்தில் நிதி சேகரித்தல், வரி செலுத்தாமை, பணச் சலவை உட்பட இரகசிய நிதிக் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான தகவல்களை வெளிக் கொண்டுவரும் பென்டோரா பத்திரம் ஊடாக இலங்கையிலுள்ள சிலர் தொடர்பிலும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மிகவும் மோசமான ஒரு நிலையாகும். பென்டோரா மோசடி வெளிப்படுத்தலின் ஊடாக இந்நாட்டிலுள்ளவர்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டிருப்பது தொடர்பில் இன்னும் இலங்கை உத்தியோகபூர்வமாக எந்தவித அறிவித்தல்களையும் விடுக்கவில்லை என்பதுடன் இந்த மோசமான விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் பொறுப்புவாய்ந்தவர்கள் மென்மைப்போக்கைக் கடைப்பிடிப்பது மிகவும் கவலையளிக்கின்றது.

குறித்த தகவல்கள் வெளிவந்தமைக்கு அமைவாக அதிகளவிலான சொத்துக்கள் அவர்களிடம் உள்ளதுடன் அவைகளை எவ்வாறு பெற்றுக் கொண்டனர் என நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்தல் வேண்டும். உரிய நிதியை அவர்கள் வைப்புச் செய்துள்ள நாடுகள் எவை என்பதையும் தெரியப்படுத்தல் வேண்டும்.

இவ்வாறான கோடான கோடி தொகையை உழைப்பதற்கு அவர்கள் செய்த வர்த்தகம் என்ன, தற்பொழுது அவர்கள் என்ன வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர், அரசாங்கத்துக்கு உரித்தான வருமான வரிகளை அவர்கள் முறையாகச் செலுத்தியுள்ளனரா, உரிய நிதியின் உண்மையான உரிமையாளர்கள் யார் போன்ற பல கேள்விகள் தற்பொழுது எழுந்துள்ளன. தற்பொழுது இலங்கை வரலாற்றில் எப்பொழுதும் காணாத பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது.

அத்தியாவசிய உணவுகள் மற்றும் அன்றான அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளுவதற்கு வரிசையாக நின்றுகொண்டு அவதிப்படும் பொதுமக்களை நாடுபூராவும் காணக்கூடியதாக உள்ளது. இரண்டு ஆண்டுகளாக கல்வித்துறை வீழ்ச்சியடைந்துள்ளதுடன் ஆசிரியர்கள் ஒரு வருடத்துக்கும் மேற்பட்ட காலம் அவர்களது தொழில்சார் உரிமைகளுக்காக போராடுகின்றனர். கொரோனா பேரழிவு காரணத்தால் பதின்மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் மரணித்துள்ளதுடன் மருந்து மாபியா காரணத்தால் மேலும் பல்வேறுபட்ட நோயாளர்கள் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே போராடிக் கொண்டிருக்கின்றனர். விவசாயிகள் உட்பட அனைத்துத் தரப்பினரும் படுமோசமான நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். என்பதுடன் நாட்டின் மொத்தப் பொருளாதாரமும் வங்குரோத்து நிலைமையிலேயே உள்ளது.

பென்டோரா தகவல் வெளிவந்ததுடன் அனேக நாடுகள் இது தொடர்பில் துரிதமாக செயற்படுவதற்கு முடிவெடுத்துள்ளதுடன் அண்டைய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இது தொடர்பில் துரிதமாக விசாரணைகளை மேற்கொள்ளுவதற்கும் முடிவு செய்துள்ளன.

ஆதலால் இது தொடர்பிலான விசாரணைகளுக்கு அரசாங்கம் உடனடியாக விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்க வேண்டும்.

இதற்கு மேலதிகமாக அனைத்து அதிகாரங்களையும் கொண்ட விசேட விசாரணைக் குழு ஊடாக உரிய வெளிக் கொண்டுவரப்பட்ட தகவல்கள் தொடர்பில் வெளித்தெரியும் வண்ணம் பக்கச்சார்பு இல்லாத விசாரணை நடத்தப்படல் வேண்டும்.

தற்பொழுது மிகவும் கவலையான நிலைமையில் உள்ள நாட்டில் கோடானகோடி ரூபாக்களை முறையற்ற விதத்தில் சேகரித்தல் மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் சர்வதேச ரீதியில் இவ்வாறு தகவல்களை வெளியிடும் போது மோசடியில் தொடர்புபட்டவர்களுக்கும் அவ்வாறான செயற்பாடுகளுக்கு உடந்தையாக இருப்பவர்களுக்கும் மாத்திரமே இவ்வாறு கண்டும் காணாததும் போல் இருக்க முடியும்.

ஆதலால் அரசாங்கம் உடனடியாக இந்த மோசடிகள் தொடர்பிலான உண்மையை நாட்டுக்குத் தெரியப்படுத்தல் வேண்டும் என்பதுடன் அதன் உண்மைத்தன்மை வெளிவரும் வரை ஐக்கிய மக்கள் சக்தி நிபந்தனையின்றி இந்நாட்டு மக்களுடன் இணைந்து தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபடும் என்பதை வலியுறுத்துகின்றோம்.


சஜித் பிரேமதாச

இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும்

ஐக்கிய மக்கள் சக்தி தலைவர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.