"மிஹிந்து நிவஹன" திட்டத்தின் கீழ் நாடு முவதும் 2022 ஆண்டளவில் மேலும் 2000 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் புத்தளம் மாவட்டத்தில் நேற்று (02) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் திறைசேரியில் இருந்து பெறப்படும் பணத்தை உரிய முறையில் முகாமைத்துவம் செய்து மக்களிடம் கையளிக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மக்களிடம் இருந்து பெறப்படும் வரிப்பணத்திலிருந்து மக்களுக்காக அரசு உதவிகள் வழங்கப்படுவதாகவும், வெற்றிகரமான அரசு என்பது அது பற்றிய கொள்கைகளை முறைப்படி நடைமுறைப்படுத்தும் அரசாங்கங்கள் மட்டுமே என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

புத்த சாசனத்திற்காக தனது பிள்ளைகளை அர்ப்பணித்த பெற்றோர்களுக்காக வீடுகளை நிர்மாணிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட  "மிஹிந்து நிவஹன" திட்டத்தின் புத்தளம் மாவட்டத்தின் அங்குரார்ப்பண வைபவத்தில் கலந்து கொண்ட போது அமைச்சர் மேற்கண்டவாறு உரையாற்றினார். இந்த விழா இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவின் தலைமையின் கீழ் ஆரச்சிகட்டுவ பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

"மிஹிந்து நிவஹன" திட்டத்தின் கீழ் வண. அருண்குளியே உதினவங்ச தேரர் மற்றும் வண. அருண்குளியே சுமணவங்ச தேரரின் பெற்றோர் சார்பில் புத்தளம், முஹுணுவடவன.பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய வீட்டிற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

புத்தளம், ஆரச்சிக்கட்டுவ பிரதேச செயலாளர் பிரிவில் கும்புட்டுகுளிய மற்றும் வைரஸ்கட்டுவ பிரதேசங்களில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கான மூன்று வீடமைப்புத் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. இங்கு 170 வீடுகள் நிர்மாணிக்கப்படும்.

" மிஹிந்து நிவஹன" திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்ட 12 பௌத்த பிக்குகளின் பெற்றோர்களுக்கு வீடமைப்புக் கொடுப்பனவாக ரூபா 6 மில்லியன் பெறுமதியான காசோலைகளும், "உங்களுக்கு வீடு - நாட்டுக்கு எதிர்காலம்" வீடமைப்பு உதவித் திட்டத்தின் கீழ் 183 பயனாளிகளுக்கு ரூபா 118 மில்லியன் பெறுமதியான காசோலைகளும், வெள்ள நிவாரண வீடமைப்பு உதவித் திட்டத்தின் கீழ் 71 பயனாளிகளுக்கு ரூபா 42 மில்லியன் பெறுமதியான காசோலைகளும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான வீடமைப்பு உதவித் திட்டத்தின் கீழ் 33 பயனாளிகளுக்கு ரூபா 21 மில்லியன் பெறுமதியான காசோலைகளும் இங்கு வழங்கி வைக்கப்பட்டன. பல்வேறு வீடமைப்புத் திட்டங்களுக்காக இங்கே வழங்கப்பட்ட மொத்தத் தொகை 189 மில்லியன் ரூபாக்கள்.ஆகும்.

இந்நிகழ்வில் கிராமிய மற்றும் பிரதேச குடி நீர் வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம், கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளர் கீர்த்தி ரஞ்சித் அபேசிறிவர்தன, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தலைவர் துமிந்த சில்வா மற்றும் பிரதேச அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


முனீரா அபூபக்கர்

2022.02.03
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.