21.02.2022 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:

(அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரச்சார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான ஆவணம், தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.)

01. சீசெல்ஸ் நாட்டு கெடெட் படையணியின் ((Cadet) அதிகாரிகளுக்கு ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புலமைப்பரிசில் வழங்கல்

ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் வெளிநாட்டு மாணவர்களுக்காக தமது சேவைகளை விரிவாக்கம் செய்துள்ளதுடன், தற்போது பல நாடுகளிலிருந்து முப்படையைச் சார்ந்த மாணவர் படையணியினருக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டுள்ளது. அப்புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தில் இணைந்து கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக சீசெல்ஸ் குடியரசின் உயர்ஸ்தானிகர் வெளிவிகார அமைச்சுக்கு தெரிவித்துள்ளார். அதற்கமைய, சீசெல்ஸ் நாட்டு முப்படையின் கெடெட் படையணி (Cadet) அதிகாரிகள் இருவரை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தில் இணைத்துக் கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சராக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் அமைச்சரவைக்கு சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. கொழும்பு 03 பிரதேசத்தில் 652 அறைகளுடன் கூடிய அதிசொகுசு ஹோட்டல் ஒன்றை நிர்மாணிப்பதற்கான கருத்திட்டம்

தம்ரோ கூட்டு வர்த்தகத்திற்குச் சொந்தமான டீ.ஆர். ஹோம் அப்லயன்சஸ் (பிரைவெட்) லிமிட்டட் நிறுவனம் மற்றும் பியெஸ்ரா (பிரைவெட்) லிமிட்டட் மற்றும் டீ.ஆர். இன்டஸ்ரீஸ் (பிரைவெட்) லிமிட்டட் போன்ற நிறுவனங்கள் கூட்டாக 70.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் கொழும்பு 03 பிரதேசத்தில் 652 அறைகளுடன் கூடிய அதிசொகுசு ஹோட்டல் ஒன்றை நிர்மாணிப்பதற்காக திட்டமிட்டுள்ளது. குறித்த கருத்திட்டம், 2008 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க மூலோபாய அபிவிருத்திக் கருத்திட்டங்களுக்கான சட்டத்தின் கீழ் மூலோபாய அபிவிருத்திக் கருத்திட்டமாக அடையாளங் காணப்பட்டு குறித்த சட்டத்தின் கீழ் ஏற்புடைய சலுகைகளை வழங்குவதற்காக இலங்கை முதலீட்டுச் சபையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தை மூலோபாயக் கருத்திட்டமாகக் கருத்தில் கொள்வதற்கும், மூலோபாய அபிவிருத்திக் கருத்திட்ட சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறித்த செயன்முறையை ஆரம்பிப்பதற்கும், மூலோபாய அபிவிருத்திக் கருத்திட்டத்தை வழங்குவதற்காக ஏற்புடைய விடுவிப்புக்கள்ஃசலுகைகளைத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டு 2008 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க மூலோபாய அபிவிருத்திக் கருத்திட்டங்களுக்கான சட்டத்தின் 3(2) ஆம் உறுப்புரையின் கீழ் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கும் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்கல் அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனம் மற்றும் இந்தியாவின் வெளிநாட்டு சேவைகள் தொடர்பான சுஷ்மா ஸ்வராஜ் நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனம் மற்றும் இந்தியாவின் வெளிநாட்டு சேவைகள் தொடர்பான சுஷ்மா ஸ்வராஜ் நிறுவனத்திற்கும் இடையில் ஒத்துழைப்பு மற்றும் பயிற்சிப் பரிமாற்றல்களை மேம்படுத்தும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்காக யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்த வரைபுக்காக சட்;டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கமைய, குறித்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக வெளிவிவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. இலங்கை மட்பாண்டத் தொழிற்சாலைக்குச் சொந்தமான வேவுட தொழிற்சாலையை தனியார் முதலீட்டாளர் மூலம் நடைமுறைப்படுத்தல்

இலங்கை மட்பாண்டத் தொழிற்சாலைக்குச் சொந்தமான குருநாகல் மாவட்டத்தின் மாவத்தகமவில் அமைந்துள்ள வேவுட ஓட்டுத் தொழிற்சாலையின் உற்பத்திச் செயற்பாடுகள், மூலப்பொருட்கள் விநியோகிப்பதில் ஏற்பட்ட சிரமங்களால் 2010 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர் அநுராதபுர சந்தஹிருசாய விகாரையை அமைப்பதற்குத் தேவையான செங்கற்களை தயாரிப்பதற்காக கடற்படையினரால் இத்தொழிற்சாலை பயன்படுத்தப்பட்டதுடன், 2017 இன் பின்னர் அச்செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டுள்ளது. அதனால், 09 ஏக்கர் 01 றூட் 31 பேர்ச்சர்ஸ் காணியில் அமைந்துள்ள வேவுட தொழிற்சாலையில், களிமண் சார்ந்த உற்பத்திகளை ஆரம்பிப்பதற்கு ஆர்வம் காட்டுகின்ற முதலீட்டாளர்களிடமிருந்து கருத்திட்ட யோசனைகளைப் பெற்று, உயர்ந்தபட்ச சாத்திய வளத்தை உறுதிப்படுத்தும் முதலீட்டாளருக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்காக கைத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. விற்பனைச் சந்தையை இலக்காகக் கொண்ட பால் உற்பத்திக் கருத்திட்டம்

பால் உற்பத்தியாளர்களின் உற்பத்தித் திறன் மற்றும் அவர்களின் உற்பத்திகளின் தரத்தை அதிகரிப்பதற்காக உயர் தரத்திலான பொறிமுறைகளைப் பிரயோகிக்கும் நோக்கில் பால் உற்பத்திக் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக ஐக்கிய இராச்சியத்தியத்தின் விவசாய திணைக்களம் நிதியனுசரணையை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது. இக்கருத்திட்டத்திற்கு 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வரைக்கும் தேவையான நிதியுதவியை வழங்குவதற்கு ஐக்கிய இராச்சியத்தின் விவசாயத் திணைக்களம் உடன்பாடு தெரிவித்துள்ளது. முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தின் மூலம் அரச மற்றும் தனியார் துறையின் பால் உற்பத்தியாளர்கள் பிரதானமாக 38 தரப்பினர்களுடன் இணைந்து அவர்களின் இயலளவை விருத்தி செய்வதற்கான வேலைத்திட்டங்களைத் தொடர்ச்சியாக மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஐக்கிய இராச்சியத்தின் விவசாயத் திணைக்களத்திற்கும் எமது நாட்டின் விவசாய அமைச்சுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக விவசாய அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. உயரிய செயலாற்றுகை வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படும் விளையாட்டு வீர வீராங்கனைகள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித்திட்டம்

2024 மற்றும் 2028 ஆம் ஆண்டுகளில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை இலக்காகக் கொண்டு, தேர்ச்சி மட்டத்திற்கமைய தகைமைகளைப் பெறல் மற்றும் பதக்கங்களை வென்றெடுக்கும் எதிர்பார்ப்புக்களுடன் நீண்டகாலம் முறையான வகையில் பயிற்சி வேலைத்திட்டத்தின் கீழ் அடையாளங் காணப்படும் விசேட திறமைகளுடன் கூடிய விளையாட்டு வீர வீராங்கனைகளுக்காக, அவர்களின் பயிற்சித் தேவைகளுக்கான நிதியுதவியை வழங்குவதற்காகவும், பயிற்றுவிப்பாளர்களுக்கு கொடுப்பனவொன்றை வழங்குவதற்கும் இயலுமை கிடைக்கும் வகையில் அவர்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய விளையாட்டுச் சபை முன்மொழிந்துள்ளது. அதற்கமைய, தெரிவு செய்யப்பட்ட உயரிய திறமைகளைக் கொண்ட குழாமிலுள்ள விளையாட்டு வீர வீராங்கனைகளுக்காக 100,000 ரூபாவும், அவர்களின் பயிற்றுவிப்பாளர்களுக்கு 50,000 ரூபாவும் மாதாந்தக் கொடுப்பனவாகச் செலுத்துவதற்காக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. கிராம அலுவலர் பிரிவு மட்டத்தில் 'சமூக ஒத்துழைப்பாளர்களாக (தொண்டர்)' இளைஞர் யுவதிகளின் சேவைகளைப் பெற்றுக்கொள்ளல்

ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நடைமுறையிலுள்ள சமுதாயப் பொலிஸ் சேவைகள் மூலம் சமூக மட்டத்தில் இடம்பெறுகின்ற சிறு குற்றங்களைக் குறைப்பதற்கு இயலுமை கிட்டியுள்ளது. அவ்வாறான வேலைத்திட்டங்களின் வெற்றித்தன்மையின் அடிப்படையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை பொலிசுடன் இணைந்து 2021 மே மாதம் தொடக்கம் சமுதாயப் பொலிஸ் சேவைகள் வேலைத்திட்டத்தின் கீழ் முழுநேர இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுக்கும் இணைப்புச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது கடமைகளில் சமூகத்தவர்களின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் குறித்த கிராம அலுவலர் பிரிவில் வசிக்கின்ற இரண்டு இளைஞர் யுவதிகளை 'சமூக ஒத்துழைப்பாளர்களாக (தொண்டர்)' சேவையில் ஈடுபடுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. குறித்த கிராம அலுவலர் பிரிவில் நிரந்தரமாக வசிக்கின்ற, 18 வயதுக்கு மேற்பட்ட, பாடசாலையில் மாணவர் தலைவர்களாக செயலாற்றிய, இளைஞர் கழகங்களில் உறுப்பினர்களாகவுள்ள, தொண்டர் குழுக்களில் செயற்பாட்டாளர்களாகவுள்ள இளைஞர் யுவதிகளுக்கு இதற்காக விண்ணப்பிக்க முடியும். அவர்கள் கௌரவ சேவையை வழங்குவதுடன், எந்தவொரு கொடுப்பனவோ அல்லது உரித்துக்களோ இல்லை. இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தால் அவர்களுக்கு தொண்டர் சேவை பற்றிய அடையாள அட்டை வழங்கப்படுவதுடன், 06 மாதகால சேவையைப் பூர்த்தி செய்த பின்னர் 'சமூகத் தலைமைத்துவம்' தொடர்பான சேவைக்கான சான்றிதழ் வழங்கப்படும். முன்மொழியப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள், சத்திர சிகிச்சை உபகரணங்கள் மற்றும் மருத்துவ ஆய்வுகூடப் பயன்பாட்டுப் பொருட்களை கொள்வனவு செய்தல்

சர்வதேச தரத்திற்கமைய எமது நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய அனைத்துவித மருந்துகள், சத்திர சிகிச்சை உபகரணங்கள் மற்றும் மருத்துவ ஆய்வுகூடப் பயன்பாட்டுப் பொருட்களின் உற்பத்திகளை மேற்கொள்வது அரசின் கொள்கையாகும். அதற்கமைய, குறித்த பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வெளிப்படையானதும் வினைத்திறனானதுமான பொறிமுறையை அறிமுகப்படுத்துவதற்கும், அப்பொறிமுறைக்கமைய எதிர்வரும் காலங்களில் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் குறித்த பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காகவும், சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. நீதிமன்றக் கட்டமைப்பில் நீதிமன்ற தானியங்கித் தொகுதியொன்றை அறிமுகப்படுத்தல்

இலங்கையில் நீதிமன்றக் கட்டமைப்பில் நீதிமன்ற தானியங்கித் தொகுதியொன்றை திட்டமிடல், விநியோகித்தல், செயற்படுத்தல் மற்றும் பராமரிப்பதற்கான கருத்திட்டமொன்று இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிறுவனத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்துவதற்காக 2020 பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்திற்காக 07 போட்டி விலைமுறிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய டயலொக் புரோட்பான்ட் நெற்வேர்க் தனியார் கம்பனி, ஃபோம்ஸ் நெற்வேர்க் சேர்விசஸ் கம்பனி மற்றும் எக்சஸ் இன்ரநெஷனல் தனியார் கம்பனி போன்ற கூட்டு வர்த்தகங்களுக்கு குறித்த விலைமனுவை வழங்குவதற்கு நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்களால் தயாரிக்கப்பட்டுள்ள கட்டளைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்

2013 ஆம் ஆண்டு 33 ஆம் இலக்க, விளையாட்டுக்களில் பங்குபற்றுவதற்காக ஊக்கமருந்துகளைப் பயன்படுவதற்கு எதிரான உடன்பாட்டுச் சட்டத்தின் 34(1) உறுப்புரையின் கீழ் விளையாட்டு துறை அமைச்சர் அவர்களால் தயாரிக்கப்பட்டுள்ள 2021 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க தடை செய்யப்பட்டுள்ள ஊக்கமருந்துகள் (தடை செய்யப்பட்டுள்ள பட்டியல்) கட்டளைகள், 2022 ஜனவரி மாதம் 18 ஆம் திகதிய விசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளன. குறித்த கட்டளைகளின் அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.