கடந்த சில ஆண்டுகளை விட இந்த ஆண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஜி. விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.

தற்போது டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட பிள்ளைகள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், டெங்கு இரத்தக்கசிவு நிலையில் உள்ள 8- 10 பிள்ளைகள் நாளாந்தம் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், டெங்கு, கொவிட் மற்றும் வைரஸ் காய்ச்சல்கள் இந்த நாட்களில் பரவி வருவதால், குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல் அல்லது சளி இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுமாறு அவர் பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

வைத்தியசாலையில் சில மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு காணப்பட்டாலும், மாற்று மருந்துகள் மூலம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். எனவே, அது குறித்து தேவையற்ற அச்சம் கொள்ளாது, டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை வீட்டில் வைத்துக் கொண்டு இருக்காமல் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட 15-20 பிள்ளைகள் நாளாந்தம் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிலும் பாதிப்புக்கள் அதிகமாக உள்ள பிள்ளைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகின்றது. ஏனைய பிள்ளைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக வீட்டிற்கு அனுப்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.