கொழும்பு 10 டி.பி. ஜாயா மாவத்தையில் இயங்கும் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் கட்டிடத்தின் ஒரு பகுதியை இந்து, கிறிஸ்தவ திணைக்களங்களுக்கு வழங்குவதற்கு எடுத்த தீர்மானம் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார். 

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி தலைமையில் உலமா சபை முக்கியஸ்தர்கள் சிலர் ஹக்கீமின் கவனத்திற்கு கொண்டு வந்ததைதையடுத்து தான் இது குறித்து விரைவில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதாக ஹக்கீம் தெரிவித்ததாக ஜமீயத்துல் உலமாவின் உதவிச் செயலாளர் அஷ்ஷேக் எம்.எஸ்.எம்.தாஸிம் தெரிவித்தார். 

ஒன்பது மாடிகளைக் கொண்ட வக்குப் இல்லமாகப் பயன்பபடுத்துவதற்கு இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது. ஏற்கனவே மூன்று மாடிகள் மாத்திரமே பூரணமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஏனைய வேலைகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக முஸ்லிம் சமய திணைத்தளத்திற்குட்பட்ட பல நிறுவனங்கள் வேறு இடங்களிலேயே இயங்கி வருகின்றன. இவ்வாறிருக்கையில், இந்த கட்டிடங்களை இந்து, கிறிஸ்தவ விவகார திணைக்களங்களுக்கு வழங்க எடுத்திருக்கும் முடிவு குறித்து முஸ்லிம் சமூகத்தில் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த கட்டிடமானது முஸ்லிம் நாடுகளின் உதவியுடனேயே நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இக்காணியை முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்திற்கு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதேநேரம் இது தொடர்பாக முஸ்லிம் இயக்கங்களின் பிரதிநிதிகள் இன்று கொழும்பில் கூடி எதிர்காலத்தில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர். கம்பஹா மாவட்ட புத்திஜீவிகள் அமைப்பின் தலைவர் முஹம்மட் முஸம்மில் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. 

முன்னாள் சவுதி அரேபியத் தூதுவர் ஹுசைன் மொஹமட், முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் முன்னாள் இணைப்பாளர் அல்ஹாஜ் உவைன், முன்னாள் பரீட்சை ஆணையாளர் எம்.எம்.முஹம்மட் உட்பட பல முஸ்லிம் இயக்கங்களின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டதாக இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த முஸம்மில் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.